பக்கம் எண் :

215

நலிவானைப் பெறல் வேண்டும் - அவருக்குத் துணையாய் அவன் பின்னின்று தன்னை வருத்தவருபவனைத் தான்துணையாகப் பெறுதல் வேண்டும்.

(க-து.) பகையிரண்டனுள் ஒன்றனைத் துணையாக்கிக் கொள்க என்றது இது.

(வி-ம்.) நாய் பின்னர் வர ஆடு முற்சேறல் இல்லையாதலால் துணையாயினானை நட்பாகக் கொள்ளவே பகைவர்கள் தன்மேல் வருதல் இலர் - 'நலிகிற்பான்' வினையெச்சமின்றிப் பெயராய் நின்றது.

'தன்றுணை யின்றால் பகையிரண்டால் தானொருவன்
இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று'

என்பது திருக்குறள்.

'வாய் முன்னதாக வலிப்பினும் போகாதே
நாய்பின்ன தாகத் தகர்' என்பது பழமொழி.

(20)

305. யானுமற் றிவ்விருந்த எம்முனும் ஆயக்கால்
வீரஞ் செயக்கிடந்த தில்லென்று - கூடப்
படைமாறு கொள்ளப் பகைதூண்ட லஃதே
இடைநாயிற் கென்பிடு மாறு.

(சொ-ள்.) யானும் இ இருந்த எம்முனும் - யானும் இவ்விடத்திலிருந்த என் தமையனும், ஆயக்கால் - ஒன்றுசேர்ந்து ஒரு செயல் செய்யப்புகுந்த இடத்து, வீரம் செயக்கிடந்தது இல் என்று - பகைவருடைய வீரம் செய்யத்தக்கது யாதொன்றுமில்லையென்று கூறி, கூட - அவரும் தம்மொடு சேர்ந்து, படைமாறு கொள்ள - தமக்குத் துணைப் படையாக நின்று மாறுகொள்ளுமாறு, பகை தூண்டல் - பகைவரிடமிருந்து பிரிய அவரைத் தூண்டுதலாகிய, அஃதே - அதுவே, இடை நாயிற்கு என்பு இடுமாறு - ஆடு காத்து நிற்கும் இடையர் நாய்க்குத் திருடர் எலும்பினையிடுதலோடொக்கும்.

(க-து.) பகை யிரண்டாயவழி இன்சொற்கூறி அவற்றுள் ஒன்றனை வயப்படுத்துக என்றது இது.

(வி-ம்.) 'யானும்' என்பது வலிமைச்செருக்கு விளங்க நின்றது. 'எம்முனும்' என்றது, பகைவனுக்குத் துணையாயினானை அகப்படக் கூறியது. வயப்படுத்தும் பொருட்டு உறவுமுறை தோன்றக் கூறப்பட்டது. 'யானும் எம்முனும்'என்றமையால்