அவ் வேறுபாட்டால் ஒருவர் கூறியவற்றை அவர்க்குத் துணைபுரிவார் தஞ் சொற்களால் மாறு கொண்டு உடைக்கவல்ல ராதலானும், அவர்க்கு - தம் பகைவர்க்கு, ஆற்றும் பகையால் அவர் களையவேண்டும் - தம்மோடு மாறுபாடு கொண்டொழுகும் துணையாய் வந்த பகைவராலேயே அவரைக் களைந் தெறிதல் வேண்டும்; ஆற்றுவான் நூற்றுவரை கொன்றுவிடும் - அங்ஙனம் கொல்லவல்லா னொருவனே நூறு பகைவர்களைக் கொல்லவல்லனாம். (க-து.) தம் பகைவர்களுக்குள் மன வேறுபாடு உண்டாகுமாறு செய்து ஒருவரை ஒருவரால் களைகஎன்பது. (வி-ம்.) வேற்றுமை யார்க்கு முண்டு என்றது, மாற்றத்தை மாற்றம் உடைத்தலுக்கு ஏதுவாயிற்று. ஆகலான், அவர் பிரிவர் என்பதாயிற்று. ஆகவே, அவர்கள் மன வேறுபாட்டில் மிக்கொழுகுமாறு செய்து அவராலேயே அவரைக் களைக என்பது. இது பகைவனுக்கும் துணையாயினானுக்கும் வேறுபாட்டை உண்டாக்குவித்து ஒருவனால் ஒருவன்அழியுமாறு செய்க என்றது. 'ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்றுவிடும்' என்பது பழமொழி. (23) 308. தெள்ளி யுணரும் திறனுடையார் தம்பகைக்கு உள்வாழ் பகையைப் பெறுதல் - உறுதியே கள்ளினால் கள்ளறுத்தல் காண்டும் அதுவன்றோ முள்ளினால் முட்களையு மாறு. (சொ-ள்.) தெள்ளி உணரும் திறனுடையார் - ஆராய்ந்து அறியும் ஆற்றலுடையார், தம் பகைக்கு உள்வாழ் பகையை பெறுதல் உறுதியே - தம் பகைவரிடத்து வாழும் உட்பகையாயினாரைத் துணையாகப் பெறுதல் வலிமையைப் பெறுதலேயாம்; கள்ளினால் கள் அறுத்தல் காண்டும் - மற்றொரு வேறுபட்ட கள்ளினால் முன் குடித்த கள்ளின் வெறியை நீக்குதலைக் கண்கூடாகக் காண்கின்றோம்; அது - உட்பகையாயினாரைத் துணையாகப் பெறுதல், முள்ளினால் முள் களையுமாறு அன்றோ - முள்ளினால் முள்ளைக் களைதலையொக்குமன்றோ? (க-து.) பகைவரிடத்து உட்பகையாய் வாழ்வாரைத் துணையாகப் பெறின் வெற்றி எளிதில் எய்தலா மென்றது இது. (வி-ம்.) 'தம் பகைக்கு உள்வாழ் பகையை' என்றது ஆற்றலின்மையான் மேற்படாது உட்பகைகொண்டு அவர்க்குத் தீங்கு வருங்காலத்தை எதிர்நோக்கி அடங்கி வாழ்வாரை. இதனான்
|