பக்கம் எண் :

218

இவர் உதவியைப் பெறுதலும் உறுதியாம். தம் பகைவருடைய நிலையை இவர் நன்கு அறிந்தவராதலான், இவர் உதவி பெற்று ஒருதலையாக எளிதின் வெற்றிபெறலா மென்பார், அவர் நட்பைப் பெறுதலே 'உறுதி' யாமென்றார். முள்ளினை முள்ளாற் களைதல்போல, பகைவரை அவரைச் சார்ந்தோர் சார்பு பெற்றுக் களைக என்பது. இது இராமன் வீடணன் சார்பால் இலங்கையர்கோன் நிலையறிந்து வென்றது போலும்.

'முள்ளினால் முட்களையு மாறு' என்பது பழமொழி.

(24)

309. நலிந்தொருவர் நாளும் அடுபாக்குப் புக்கால்
மெலிந்தொருவர் வீழாமை கண்டு - மலிந்தடைதல்
பூப்பிழைத்து வண்டு புடையாடும் கண்ணினாய்!
ஏப்பிழைத்துக் காக்கொள் ளுமாறு.

(சொ-ள்.) பூ பிழைத்து வண்டு புடையாடும் கண்ணினாய்! - பூக்கள் என்று பிழையாகக் கருதி வண்டுகள் மருங்கு வந்து அணைந்து ஆடும் கண்களையுடையாய்!, ஒருவர் நாளும் நலிந்து அடுபாக்கு புக்கால் - ஒருவர் நாள்தோறும் நலிதலைச் செய்து பகைவரை அடும்பொருட்டுப் புகுந்தால், மெலிந்து ஒருவர் வீழாமை கண்டு உயிர்மெலிந்து ஒருவரும் இறந்த வீழாமையைக் கண்டு, மலிந்து அடைதல் - அச்சம் மிகுந்து அவரை அடைக்கலமாக அடைதல், ஏ பிழைத்து கா கொள்ளுமாறு - அம்பினின்றும் பிழைத்துப் புறமுதுகிட்டுத் தன்னைக் காத்துக்கொள்ளுமாற்றை ஒக்கும்.

(க-து.) போரின்கண் புகுந்த பின்னர்ச் சரணாக அடைதல் இழிவைத் தருவதொன்றாகும்.

(வி-ம்.) மெலிந்து ஒருவரும் என்ற உம்மை விகாரத்தாற்றொக்கது. போரின்கண் ஆராய்ந்தே புகுதல் வேண்டும். புகுந்த பின்னர் அவர் வலிமையைக் கண்டஞ்சிச் சரண்புகுதல் புறமுதுகிட்டு ஓடுதலை யொக்கும். அடுபாக்கு : பாக்கு :ஈற்று வினையெச்சம்.

'ஏப்பிழைத்துக் காக்கொள்ளு மாறு' என்பது பழமொழி.

(25)

310. மறையா தினிதுரைத்தல் மாண்பொரு ளீதல்
அறையா னகப்படுத்துக் கோடல் - முறையால்
நடுவணாச் சென்றவரை நன்கெறித லல்லால்
ஒடியெறியத் தீரா பகை.