(சொ-ள்.) மறையாது இனிது உரைத்தல் - கருதியதை மறைத்து வைக்காது இனிமையாக எடுத்துக்கூறுதல், மாண்பொருள் ஈதல் - மாட்சிமைமிக்க பொருளைக் கொடுத்தல், அறையான் அகப்படுத்துக் கோடல் - வஞ்சனை முதலியவற்றால் கீழறுத்து அவரைச் சார்ந்தாரைத் தம்மோடு சேர்த்துக்கொள்ளல், முறையால் நடுவணா(க)சென்று அவரை நன்கு எறிதல் அல்லால் - முறையாக நடுநிலைமையிற் சென்று அப்பகைவர்களை அறச்செய்தல் ஆகிய இவையல்லாமல், ஒடி யெறிய பகை தீரா - தண்டம் ஒன்றுகொண்டே பகையைஅறச்செய்ய அப்பகை தீர்தல் இல்லை. (க-து.) பகைவரை நான்கு நெறியான் வயப்படுத்துக என்றது இது. (வி-ம்.) 'மறையா உரைத்தல்' என்றது மாறுகோடலால் தனக்கு உண்டாம் பயனையும் அவர்க்கு உண்டாம் தீமையையும் எடுத்துக்கூறி, மாறுகொள்ளாதிருத்தலே நன்று என்றல், மூன்று நெறியானும் செய்து நான்காம் நெறியைக் கைக்கொள்ளலின் முறையால் என்றார். செற்றம்பற்றிப் புறமுது கிடுவார் முதலியோரைக் கொல்லுதலின்றி வெல்க என்பார், 'நடுவணாக' என்றார். 'ஒடியெறியத் தீரா பகை' என்றது நான்காம் நெறி ஒன்றையே கைக்கொண்டு எறிந்தொழிப்பின் அவன் செய்த முறையன்றிய செயலால், அந்நாட்டவர்க்கும் பிறர்க்கும் உளத்துப் பகைமை நீங்காதுளவாம் என்பது. 'ஒடியெறியத் தீரா பகை' என்பது பழமொழி. (26) 29.படை வீரர் 311. நூக்கி அவர்வெலினும்தாம்வெலினும் வெஞ்சமத்துள் தாக்கி எதிர்ப்படுவர் தக்கவர்; அஃதன்றிக் காப்பி னகத்திருந்து காய்வார் மிகவுரைத்தல் யாப்பினுள் அட்டிய நீர். (சொ-ள்.) தக்கவர் - வீரத்திற்குத் தகுதியுடையவர்கள் எனப்படுவார், வெம் சமத்துள் - கொடிய போர்க்களத்துள், அவர் வெலினும் தாம் வெலினும் - அவர் வென்றாலும் தாம் வென்றாலும், தாக்கி நூக்கி எதிர்ப்படுவர் - அடர்த்துத்தள்ளி வெற்றியைக் காண்பவரேயாவர்; அஃது அன்றி - அது செய்தலின்றி, காப்பின் அகத்திருந்து காய்வார் மிக உரைத்தல் -அரணகத்தேயிருந்து
|