பக்கம் எண் :

22

தம்மைக் கல்வி யறிவால் ஒத்த அறிஞர்களைத் தம்முடன் சேர்த்துக்கொள்ளுதல், மறம் கெழும் மாமன்னர் - வீரம் பொருந்திய பேரரசர்கள், யானையால் யானை யாத்தற்று - யானையைக் கொண்டு யானைகளைப் பிடித்ததனோ டொக்கும்.

(க-து.) அறிவுடையார் அறிவுடையாரையே சேர்த்துக் கொள்வர்.

(வி-ம்.) அமர் - விரும்புதல். 'அளிநிலை பொறாது அமரிய முகத்தள்' என்ற அகநானூற்று அடியிலும் இப்பொருளில் வந்தது. ஆணம் - மனத்திட்பம், 'ஆணை மருத்துயரம் ஆணம் உடைமையின்' என்று பெருங்கதையடியிலும் இப்பொருளில் வந்தது; 'யானையால் யானையாத் தற்று' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(4)

30. தெரிவுடையா ரோடு தெரிந்(து) உணர்ந்து நின்றார்
பரியார் இடைப்புகார் பண்புஅறிவார் மன்ற
விரியா இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப!
அரிவாரைக் காட்டார் நரி.

(சொ-ள்.) விரியா இமிழ்திரை வீங்குநீர் சேர்ப்ப - பரவி ஒலிக்கின்ற அலைகள் மிகுதியும் உடைய கடற்கரையை உடையவனே!, அரிவாரை காட்டார் நரி - நெல்லரிவோர்களுக்கு (அவ்வேலை கெடும்படி) நரியைக் காண்பியார் (அதுபோல), தெரிவு உடையாரோடு - ஆராய்ச்சி உடையாருடன், தெரிந்து உணர்ந்து நின்றார் - ஆராய்ந்து உண்மை கண்டுணர்ந்தார், பரியார் இடைப்புகார் - நுண்ணறிவு இல்லாரிடம் செல்லார், பண்பு அறிவார் மன்ற - அவர் குணங்களை ஒருதன்மையாக அறிவார் ஆதலான்.

(க-து.) அறிவுடையார் தம் போன்றாரைஅறிவிலாரிடம் அழைத்துச் செல்லார்.

(வி-ம்.) அறிவிலார் குணங்களை அறிவாராதலால் அவரைக் காட்டி வீணே காலங்கடத்தித் தம் வேலையைக் கெட்டொழியார் என்பதாம் தெரிதல் - உண்மையை ஆராய்தல், தெரிவு - உண்மையை அறியும் அறிவு (ஆராய்ச்சி), தேர்தல், தேர்வு முதலியவும் முறையே இவையடியாகத் தோன்றியன. மன்ற : தேற்றப் பொருளில் வந்தது. 'அரிவாரைக் காட்டார் நரி' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(5)