வெகுள்வாராய் மிகவும் வீரங் கூறுதல், யாப்பினுள் அட்டிய நீர் - செய்யினுள் விட்ட நீரைஒக்கும். (க-து.) வீரர் எனப்படுவார் மனத்திண்மையையும் பிறவற்றையும் பெற்று வெற்றியை எதிர்நோக்குபவரே யாவர். (வி-ம்.) வயலுள் விட்ட நீர் பயிர்கள் வளர ஏதுவாயினாற்போல, காப்பகத்து இருந்து மிக வுரைத்தல் பகைப் பயிர் வளர்தற்கு ஏதுவாயிற்று. 'யாப்பினா னாயதனை யாப் பென்றார்' என்பது பரிமேலழகர் விளக்கம். இதனுள் வீரருக்குரிய இலக்கணமும், அவரல்லாரை யறியுமாறும், அவர் தேடிக்கொள்வதும் கூறப்பட்டன. காய்வார் :முற்றெச்சம். 'யாப்பினுள் அட்டிய நீர்' என்பது பழமொழி. (1) 312. உற்றா லிறைவற் குடம்பு கொடுக்கிற்பான் மற்றவற் கொன்னாரோ டொன்றுமோ? - தெற்ற முரண்கொண்டு மாறாய உண்ணுமோ? உண்ணா இரண்டே றொருதுறையுள் நீர். (சொ-ள்.) தெற்ற முரண்கொண்டு மாறு ஆய - தெளிவாக நிறைந்த வலிமையைப் பெற்று மாறுபாடுகொண்டுளவாகிய, இரண்டு ஏறு - இரண்டு காளைகள். ஒரு துறையுள் நீர் உண்ணுமோ? - ஒரு நீர்த்துறையில் தண்ணீர் உண்ணுமோ?, உண்ணா - தம்முள் பொருந்தி நீர் பருகுதல் இல. (அதுபோல), உற்றால் - ஓர் இடையூறு தம்மரசனுக்கு வந்துற்றால், உடம்பு கொடுக்கிற்பான் - உடம்பினை அவன்பொருட்டு அளிக்கவல்லவன், அதற்கு ஒன்னாரோடு - அவனுக்குப் பகையாயினாரோடு, ஒன்றுமோ - கீழறுக்கப்பட்டுச் சேர்தலுண்டோ? (இல்லை.) (க-து.) பகைவராற் கீழறுக்கப் படாததாயிருப்பதே படையி னியல்பாம். (வி-ம்.) உயிரும் உடம்பும் தம்முளியைந்து நிற்கும் ஒற்றுமை கருதி உடம்பு என்றாராயினும், உயிர் என்பதே கருத்தாகக் கொள்க. பகைவராற் கீழறுக்கப்படாததாகவே. அரசன் மாட்டன்புடைமை பெறப்படும். 'முரண்' என்பது மாறுகோடற்கேதுவாகிய வலிமையின்மேல் நின்றது. மாறுகொண்ட இரண்டு எருதுகள் ஒரு துறையில் நீருண்ணாவாறுபோல, வீரர் எனப்படுவார் கீழறுக்கப்பட்டுப் பகைவரோடு ஒன்றுதல் இலர். 'அறைபோகாதாகி' என்பது திருக்குறள். 'உண்ணா இரண்டேறு ஒருதுறையுள் நீர்' என்பது பழமொழி. (2)
|