பக்கம் எண் :

221

313. ஆற்ற வினைசெய்தார்நிற்பப் பலவுரைத்து
ஆற்றாதார் வேந்தனை நோவது - சேற்றுள்
வழாமைக் காத்தோம்பி வாங்கும் எருதாங்
கெழாமைச் சாக்கா டெழல்.

(சொ-ள்.) ஆற்ற வினைசெய்தார் நிற்ப - மிகவும் போர்த்தொழிலைச் செய்து வெற்றியை உண்டாக்கினார் வாளாயிருப்ப, ஆற்றாதார் வேந்தனை பல வுரைத்து நோவது - போரிற் சென்று ஒருவினையும் செய்யாதார் தமக்குச் சிறப்புச் செய்திலனென்று பலவாறுரைத்து அரசனை நொந்துகொள்வது, சேற்றுள் வழாமைகாத்து ஓம்பி வாங்கும் எருது - சேற்றுள் வழுவி அகப்பட்டு வருந்தாது காத்து இழுக்கவல்ல எருது, ஆங்கு எழாமை - அங்கே எழுந்து செல்லாதிருக்கவும், சா(க்)காடு எழல் - அவ்வாற்றலில்லாத சகடம் எழுந்து செல்லுதலை யொக்கும்.

(க-து.) வினைமாட்சி யில்லார் சிறப்புப்பெறுதல் இலர்.

(வி-ம்.) எருது நிற்க, சகடம் எழுந்துசேறல் பொருந்தாமைபோல, அவர் பரிசிற்கெழுதல் பொருந்தாத தொன்றாம். 'பலவுரைத்து' என்றது, அரசன் வீரர் திறம் அறியான் எனவும் அவர்க்குச் செய்யத்தகும் சிறப்புச்செய்ய அறியானெனவும், என்றிவைபோற் கூறுவனவாம். 'சாக்காடு' 'சாகாடு' என்றிருத்தல் நல்லது என்று கூறும் மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பு. அங்ஙனமே பொருள் கொள்ளப்பட்டது.

'சேற்றுள் - வழாமைக் காத்தோம்பி வாங்கும் எருதாங்கு எழாமைச் சாக்கா டெழல்' என்பது பழமொழி.

(3)

314. தாரேற்ற நீண்மார்பின் தம்மிறைவன் நோக்கியக்கால்
போரேற்று மென்பார் பொதுவாக்கல் வேண்டுமோ
யார்மேற்றாக் கொள்ளினும் கொண்டீக; காணுங்கால்
ஊர்மேற்ற தாமமணர்க் கோடு.

(சொ-ள்.) காணுங்கால் - ஆராயுமிடத்து, அமணர்க்கு ஓடு - சமணர்களுக்கு (அவர்கள் இரந்துண்ணும்) ஓட்டில் இடும் அறச்செயல், ஊர்மேற்றதாம் - ஊரின் கண்ண தாம் (அதுபோல), போர் ஏற்றும் என்பார் - போரினை விரும்பி ஏற்றுக்கொள்வேமென்னும் வீரர்கள், தார் ஏற்ற நீள் மார்பின் தம் இறைவன் - மாலை பொருந்திய நீண்ட மார்பினையுடைய தம்முடைய அரசன், நோக்கியக்கால் - போருக்குச் செல்க என்ற குறிப்புடன் நோக்கியவிடத்து,