பக்கம் எண் :

223

குறைவு, குற்றங்களெனப்பட்டது. வீரஞ்சொல்லுதல் தன்னுடைய குற்றங்களைத் தானே கூறுதலை யொக்கும். இஃதே கூறுங் கருத்துடையார் மாற்றிக் கூறினார். வீழ்தல் - விரும்புதல் - 'தாம் வீழ்வார் மென்தோள்'என்றவிடத்தும் இப்பொருளில் வந்தது.

'சோரம் பொதியாத வாறு' என்பது பழமொழி.

(5)

316. உரைந்தாரை மீதூரர்மீக்கூற்றம் பல்லி
நெரித்த சினைபோலும் நீளிரும் புன்னைப்
பொரிப்பூ இதழுறைக்கும் பொங்குநீர்ச் சேர்ப்ப!
நரிக்கூஉக் கடற்கெய்தா வாறு.

(சொ-ள்.) பல்லி நெரித்த சினை போலும் நீள் இரும் புன்னை - பல்லியது நெரிக்கப்பட்ட முட்டையைப்போல மலர்ந்திருக்கின்ற நீண்ட பெரிய புன்னை, பொரி பூ இதழ் உறைக்கும் பொங்குநீர் சேர்ப்ப - பொரியைப் போன்ற பூக்களினது இதழ்களைப் பரப்பும் நீர் மிகுந்த கடல் நாடனே!, உரைத்தாரை - தம்மை நலிய உரைத்தவர்களை, மீதூரா மீக்கூற்றம் - செயலால் மிக் கொழுகாது சொற்களால் தாமும் மிக்கொழுகல், நரி கூ கடற்கு எய்தா ஆறு - நரியின் கூவிளியால் கடல் ஒலியைத் தாழ்விக்கமாட்டாதவாறு போலும்.

(க-து.) வீரர்கள் தம்மை நலியஉரைத்தார்களைச் செயலால் அடுதல் வேண்டும்.

(வி-ம்.) மீதூராத என்னும் பெயரெச்சத் திறுதி தொக்கது. நெரித்த : செயப்பாட்டுவினைப் பெயரெச்சம். நரியின் கூவிளி கடலோசையை அடக்காதவாறுபோல, மேம்பட்டு, உரைத்தலால் பகைவர் அடங்குதலிலர். பகைவர் தோன்றிய துணையானே முற்ற அறுக்க வேண்டுதலின்,செயலாலடர்த்தலே வேண்டப்படுவதாயிற்று.

'நரிக் கூஉக் கடற்கெய்தா வாறு' என்பது பழமொழி.

(6)

317. அமர்நின்றபோழ்தின்கண் ஆற்றுவா ரேனும்
நிகரன்றி மேல்விடுதல் ஏதம் - நிகரின்றி
வில்லொடுதே ரொத்த புருவத்தாய் அஃதன்றோ
கல்லொடு கையெறியு மாறு.