(சொ-ள்.) வில்லொடு நேர் ஒத்த புருவத்தாய் - வில்லினொடு நேராக ஒத்த புருவங்களை யுடையாய்!, அமர் நின்ற போழ்தினகண் - போர் நடவாநின்ற போழ்தத்து, நிகர் இன்றி ஆற்றுவாரேனும் - ஒப்புமையின்றிப் போராற்ற வல்லரேனும், நிகர் இன்றி மேல் விடுதல் ஏதம் - ஒப்புமை கருதலின்றி (வலியார்) மேற்படை விடுதல் துன்பந் தருவதாம்; கல்லொடு கை யெறியுமாறு அஃது அன்றோ -கல்லொடு மாறுகொண்டு கையால் எதிர்த்துத் தாக்குதலைஅஃது ஒக்குமன்றோ? (க-து.) வீரர்கள் தம்மின் வலியார்மேற் சேறல் துன்பம் பயப்ப தொன்றாம். (வி-ம்.) போராற்ற வல்லரேனும், பகைவருடைய நிலைமை அறியாது, வலியார்மேற் படை தொடுத்தல்,கல்லொடு மாறு கொண்டெறிந்த கையை யொப்பத் துன்பம்பயப்பதாம். 'கல்லொடு கையெறியு மாறு' என்பது பழமொழி. (7) 318. வரைபுரை வேழத்த வன்பகையென் றஞ்சா உரையுடை மன்னருள் புக்காங் கவையுள் நிரையுரைத்துப் போகாதொன் றாற்றத் துணிக திரையவித் தாடார் கடல். (சொ-ள்.) திரை அவித்து கடல் ஆடார் - அலைகளை நீக்கிப் பின்னர்க் கடலில் ஆடுதலிலர் (அதுபோல), உரையுடைய மன்னருள் புக்கு - புகழுடைய அரசர்கள் அவை நடுவே புகுந்து, ஆங்கு அவையுள் நிரை உரைத்து - அவ்விடத்திருந்த அவை நடுவே கூறும் முறையால் தனது வீரத்தை மிகுத்துரைத்து, வரை புரைவேழத்த வன்பகை என்று அஞ்சா - மலைபோலும் யானைப் படையை உடையதாயிருந்தது வலிய பகை என்று அஞ்சி, போகாது - இது சமயம் வெல்ல முடியாததென் றொழியாது, ஒன்று ஆற்ற துணிக - கூறிய தொன்றனைச் செய்யத் துணிந்து நிற்க. (க-து.) வீரர் பகைவருடைய வலி குறைந்த ஞான்று அவரைவெல்வோமென்று நினையாதொழிபவராக. (வி-ம்.) முன்னரே தாம் அரசரிடம் தம் வீரத்தை மிகுத்துக் கூறியிருத்தலின் அதை மெய்ப்பிக்க வேண்டுதலானும், அங்ஙனம் போரிற்சென்று புரந்தார்கண் நீர்மல்கச் சாதல், வேண்டப்படுவ தொன்றாகலானும், பகைவர் வலிய வந்து நிற்றல் உறுதியன்மையானும், துணிந்து செய்க என்பார், 'ஆற்றத் துணிக'என்றார். 'திரையவித் தாடார் கடல்' என்பது பழமொழி. (8)
|