பக்கம் எண் :

228

(க-து.) வீரர்க்கு அறிவாற்றலும் இன்றியமையாத தொன்றென்பது இது.

(வி-ம்.) வெற்றியைத் தறுகண் என்றார், அது காரணமாக வருதலின். பேதையார் தாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் புண்ணியம் வேண்டும் என்று நினைத்துக், கடைப்பிடியோடு செயலில் ஊக்கமு மிலராய், அஞ்சி ஆண்மை செய்தொழுகுவர். உள்ளச்சம் உடையவராதலின் அவர் வீரராகக் கருதப்படார். ஆகவே, அறிவாற்றல் மெய்யாற்றல் என்ற இரண்டும் வீரர்க்கு இன்றியமையாதவை. அறிவச்சம் : மூன்றன் தொகை.

'அறிவு அச்சம் ஆற்றப் பெரிது' என்பது பழமொழி.

(13)

324. தன்னின் வலியானைத் தானுடைய னல்லாதான்
என்ன குறையன் இளையரால்? - மன்னும்
புலியிற் பொருந்திறல வாயினும் பூசை
எலியில் வழிப்பெறா பால்.

(சொ-ள்.) பூசை - பூனை, மன்னும் புலியின் பெரும்திறலவாயினும் - கொலைத்தொழில் நிலைபெற்றிருக்கும் புலிபோல மிக்க வலிய வாயினும், எலி இல் வழி - எலி இல்லாத இடத்தில், பால் பெறா - கொன்றுண்ணும் உணவு பெறுதல் இல்லை. (ஆதலின்), தன்னின் வலியானை தான் உடையன் அல்லாதான் - தன்னைவிட மிக்க வலிமை உடையவனைத் தான் பகைவனாகப் பெறாதவன், இளையரால் என்ன குறையன் -போர்வீரர்களால் என்ன குறைமுடித்தலை உடையவனாவான்?

(க-து.) படைவீரர்கள் பகைவர்களை உடைய அரசனைஅடைதல் வேண்டும்.

(வி-ம்.) புலி உவமையாகக் கூறப்பட்டது பூசையின் கொல்லுதற் றொழிலை உணர்த்துதற்காதலின். 'பால்பெறா' என்றதற்குக் கொன்றுண்ணும் உணவு பெறுதல் இல்லையென்றுரை கூறப்பட்டது. பால் ஈண்டு உணவின்மேல் நின்றது. பூசை எலி யில்வழி உணவு பெறுதல் இல்லையாதல்போல, பகைவர்களை உடையனல்லாத அரசனிடத்து வீரர் பெறுவதொன்றில்லை. உடையானை அடைக என்பது கருத்து. இது மாற்றிக் கூறப்பட்டது. இளையர், போர்வீரர். இளையர் என்றசொல் போர்வீரருக்குவழங்கப்பட்டமை படையினியல்பு விளக்குவதாம்.

'மன்னும் புலியிற் பெருந்திறல வாயினும் பூசை எலியில் வழிப்பெறா பால்' என்பது பழமொழி.

(14)