325. கொடையும் ஒழுக்கமும் கோளுள் ளுணர்வும் உடைய ரெனப்பட் டொழுகிப் பகைவர் உடையமேற் செல்கிற்கும் ஊற்றம் இலாதார் படையின் படைத்தகைமை நன்று. (சொ-ள்.) கொடையும் ஒழுக்கமும் கோள் உள்ளுணர்வும் - கொடைத் தொழிலும், செங்கோன்மையும், படைகுடி முதலியவற்றின் கருத்தை அறியும் நுண்ணறிவும், உடையர் எனபட்டு ஒழுகி - உடையவ ரிவரென்று படை, குடி முதலியவற்றால் சொல்லப்பட்டு அந்நெறியின்கண்ணேயே ஒழுகி, பகைவர் உடைய - மாற்றலர் புறமுதுகிட்டு ஓட, மேல் செல்கிற்கும் ஊற்றம் இலாதார் - மேற்சென்று அவரை அழிக்கத்தக்க வலிமை இல்லாதவர்கள், படையின் - படைகளை உண்டாக்குவார்களாயின், படைத் தகைமை நன்று - அப்படைகளின் பண்புகள் சிறப்புற இருக்கும். (க-து.) படை உடையானுக்குக் கொடை, செங்கோன்மை,கோளுணர்வு முதலியன வேண்டும். (வி-ம்.) ஈத்தளிக்கும் இயல்பு சிறப்பாக வேண்டுமென்பார் கொடையை முற்கூறினார். ஒழுக்கம் பொதுவாயினும் ஈண்டு அரசர் மேற்றாய் ஒழுக்கங்களும் என நின்றது. கோள் உள்ளுணர்வு என்றது படையின் கருத்தினை ஆராய்ந்தறிதலை. இம்மூன்று முடையார் படையின் படை நன்று. இலராயின் படைமாட்சி உண்டாவதில்லை. இம்மூன்று முடையானே படைமாட்சி உடையானெனப்படுவான். இம்மூன்றும் படைகோடற் கேதுவாயின. 'படையின் படைத்தகைமை நன்று' என்பது பழமொழி. (15) 326. இருகயல் உண்கண் இளையவளை வேந்தன் தருகென்றாற் றன்னையரு நேரார் - செருவறைந்து பாழித்தோள் வட்டித்தார் காண்பாம் இனிதல்லால் வாழைக்காய் உப்புறைத்தல் இல். (சொ-ள்.) இரு கயல் உண்கண் இளையவளை - இரண்டு கயல்கள் போன்ற மையுண்ட கண்களையுடைய இளமைப் பருவமுடையாளை, வேந்தன் தருக என்றால் - அரசன் கொடுப்பாயாக என்று தூது விட்டால், தன் ஐயரும் நேரார் - இவள் தமையன்மாரும் கொடுத்தற்கு உடம்படாராகி, செரு அறைந்து பாழித்தோள் வட்டித்தார் -
|