என்று பிறரும் துணைகூறினார். நாண் மனமொழி மெய்களது ஒடுக்கத்தான் வருவனவோவெனின், அவை அவரளவல்ல; அழகிய நுதலினை உடைய குலமகளிர்கள் நாண்கள் என்பது பரிமேலழகர் உரை. இழிந்த கருமங் காரணமாக, நாணுதலும் இதனுள் அடங்கி நிற்கும். பின்னர் நின்ற மூன்றும் பழமொழிகள். (1) 328. உரிமைதனில் தம்மோ டுழந்தமை கண்டு பிரிவின்றிப் போற்றப் படுவார் - திரிவின்றித் தாம்பெற் றதனால் உவவார் பெரிதகழின் பாம்புகாண் பாரும் உடைத்து. (சொ-ள்.) பிரிவு இன்றி போற்றப்படுவார் - வேறுபாடின்றிக் காப்பாற்றப்படுபவர்கள், உரிமைதனில் தம்மோடு உழந்தமை கண்டு - நட்புரிமையால் தம்மோடு வருந்தினமையைப் பார்த்து, திரிவு இன்றி - மன வேறுபாடின்றி, தாம் பெற்றதனால் உவவார் - தாம் பெற்ற பொருளால் மனமகிழ்தலிலராய்ப் பின்னும் விரும்பாநிற்பர், பெரிது அகழின் - புற்றினை மிகவும் கீழே தோண்டிச் சென்றால், பாம்பு காண்பாரும் உடைத்து - (அதனால்), பாம்பைக் காண்கின்றவர்களையும் மிகுதியாக உடைத்தாயிரா நின்றதுஇவ்வுலகம். (க-து.) செய்தது கொண்டு உவத்தலேநட்பிற் கழகாம். (வி-ம்.) அழிவின்கண் அல்லல் உழப்பதே நட்பாதலின், 'உழந்தமை கண்டு' என்றார். 'திரிவுஇன்றி' என்றது. பின்னும் அவரான் முடியாத ஒரு காரியத்தைச் செய்து தருமாறு வேண்ட, அது செய்யாமைபற்றி மன வேறுபாடு கோடலின்றி என்பது. பாம்பு காண்டல் உறுதியன்மைபோல, அவராற்றுன்புறுதல் இல்லையாம். ஒரு வேளை உண்டாயினும் உண்டாமென்பார், 'பாம்பு காண்பாரும் உடைத்து'என்றார். 'பெரிது அகழின் பாம்பு காண்பாரும் உடைத்து' என்பது பழமொழி. (2) 329. அகத்தா லழிவுபெரிதாயக் கண்ணும் புறத்தாற் பொலிவுறல் வேண்டும் எனைத்தும் படுக்கை இலராயக் கண்ணும் உடுத்தாரை உண்டி வினவுவா ரில்.
|