(சொ-ள்.) படுக்கை இலர் ஆய கண்ணும் - படுத்தற்கு ஒரு சிறிய இடம் இலராயவிடத்தும், உடுத்தாரை உண்டி வினவுவார் இல் - சிறப்புற ஆடை உடுத்தாரை வறியராகக் கருதி உண்டிவேண்டுமோ என்று கேட்பார் ஒருவருமிலர். (ஆதலால்), அகத்தால் அழிவு பெரிது ஆய கண்ணும் - மனையின்கண் வறுமை மிக்க இடத்தும், எனைத்தும் புறத்தால் பொலிவ உறல் வேண்டும் - எப்படியாயினும் புறத்தோற்றத்தால் பொலிவுற்று விளங்குதல் வேண்டும். (க-து.) புறத்தோற்றப் பொலிவும் வேண்டப்படுவதொன்றாகும். (வி-ம்.) 'பெரிதாயக் கண்ணும்' என்றமையால், செல்வம் உள்ள காலத்தே அணிபெற இருத்தல் சொல்லாமே பெறப்பட்டது. வறுமையை 'அழிவு' என்றார், ஆக்கவேலை யின்றி அழிவினையே மேற்கொண்டு அது செய்தலின். 'குடிப்பிறப்பழிக்கும் விழுப்பங் கொல்லும்' என்று அதன் தொழிலைப் பிறரும் கூறினார். படுக்கை அதற்குரிய இடத்தின்மேல் நின்றது. சிறப்புற ஆடை அணிவாரை யாரும் இரப்போராகக் கருதார் என்பார், 'உடுத்தாரை உண்டி வினவுவார் இல்' என்றார். 'உடுத்தாரை உண்டி வினவுவார் ரில்' என்பது பழமொழி. (3) 330. சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பிற்றம் இல்லாளே வந்த விருந்தோம்பிச் - செல்வத் திடரின்றி ஏமாந் திருந்தாரே நாளும் கடலுள் துலாம்பண்ணி னார். (சொ-ள்.) சொல்லாமை நோக்கி குறிப்பு அறியும் பண்பின் - தான் கூறுவதற்கு முன்னரே முகம் நோக்கி மனக் குறிப்பினை அறியும் பண்பினை உடைய, தம் இல்லாளே வந்த விருந்து ஓம்பி - தன் மனைவியே வந்த விருந்தினர்களுக்கு வேண்டுவன செய்து ஓம்ப, செல்வத்து இடர் இன்றி ஏமாந்திருந்தாரே - அதனால் செல்வத்தின்கண் துன்பமின்றி இன்பமுற்று வாழ்ந்தவர்களே, நாளும் கடலுள் துலாம் பண்ணினார் - நாடோறும் கடலிலுள்ள நீரைத் துலா இட்டு இறைப்பவரோடொப்பர். (க-து.) குறிப்பறிதலும்,விருந்தோம்பலுமுடைய இல்லாளோடு செல்வத்துடனவாழ்பவர்களே நீங்காத இன்பமுடையார். (வி-ம்.) ஓம்பி செயவென் னெச்சப் பொருண்மையது. 'வித்து மிடல் வேண்டுங் கொல்லோ' என்றலின், விருந்தோம்புதல்
|