தொடி என்றாயது. பிறரும் 'தொடிநெகிழ்ந்தனவே' என்று நெகிழற் கருமை தோன்ற நின்றமையைக் குறித்தார். 'நெறியல்ல சொல்லல் நீ' என்றது, பரிசு கருதி உழல்பவன் நீயாதலால், நீயும் உடன்பட்டிருந்தாய் என்பதாம். அறிதுயில் : ஈண்டு இஃது எல்லாவற்றானும் அறிந்துகொண்டு வாயிலடைத்துத் தூங்கும் பொய்த் தூக்கம். அதுவாயின் மனனுணர்வு ஒன்றே யறிய, ஏனைய புலன்களும் பொறிகளும் தூங்குவதாம். அறிதுயிலினின்றும் எழுப்புதல் அரிதாமாறுபோல, எம்மிடத்தும் வாயில் பெறுதலும் இயலாதாம்;செல்க என்பதாம். 'அறிதுயில் ஆர்க்கும் எழுப்பல் அரிது' என்பது பழமொழி. (7) 334. விழுமிழை நல்லார் வெருள்பிணைபோல் நோக்கம் கெழுமிய நாணை மறைக்கும் - தொழுநையுள் மாலையும் மாலை மயக்குறுத்தாள் அஃதால் சால்பினைச் சால்பறுக்கு மாறு. (சொ-ள்.) விழும் இழை நல்லார் வெருள் பிணைபோல் நோக்கம் - எல்லோரானும் விரும்பப்படும் பொற்கல னணிந்த பெண்களுடைய வெருண்ட மான்போன்ற நோக்கங்கள், கெழுமிய நாணை மறைக்கும் - (ஆடவருடைய) செறிந்த நாணினைத் தோன்றாமல் மறைக்க வல்லதாம்!, தொழுநையுள் - யமுனையின் கண்ணே, மாலையும் மாலை மயக்குறுத்தாள் - திருமாலையும் பின்னை யென்பாள் தன்னழகினால் மயங்கச் செய்தாள்; அஃது - அது, சால்பினை சால்பு அறுக்குமாறு - மிகுதியினை மிக்க தொன்றனால் அறுக்கு மாற்றைஒக்கும். (க-து.) அறிவான் மிக்கார் மகளிரைச்சார்ந்தொழுகல் கூடாது. (வி-ம்.) வீழு மிழை, விழு மிழையென்று முதற்குறைந்து நின்றது. நாணாவது இழிந்த கருமம் செய்யப்புகுங்கால் தோன்றும் மனக்குலைவு. 'மாலையும்' என்றது, பிறரை மால் செய்தலையே தொழிலாகக்கொண்டு அதனாலேயே பெயர்பெறல். திருமாலையும் எனச் சிறப்பும்மையாய் நின்றது. திருமாலையே பின்னை மயக்குறுத்தாள்; ஆதலின், நிறையுடையோம் என்று கருதிச் சார்ந்து ஒழுகின், நிறையினின்றும் தவறி எல்லாக் குணங்களையும் இழக்க நேரிடும்என்பது. 'சால்பினைச் சால்பறுக்கு மாறு' என்பது பழமொழி.
|