'ஈன்றாள் மகள்தன் உடன்பிறந்தா ளாயினும் சான்றோர் தமித்தா உறையற்க ஐம்புலனும் தாங்கற் கரிதாக லான்' என்பது ஆசாரக்கோவை. (8) 335. தூய்மை மனத்தவர் தோழர் மனையகத்தும் தாமே தமியர் புகல்வேண்டா - தீமையான் ஊர்மிகின் இல்லை கரியோ ஒலித்துடன் நீர்மிகின் இல்லை சிறை. (சொ-ள்.) தூய்மை மனத்தவர் - தூய்மையான மனத்தை உடையவர்கள், தோழர் மனையகத்தும் - நண்புடையார் இல்லின் கண்ணும், தாமே தமியர் புகல் வேண்டா - தாமாகத் தனித்துச் செல்லுதல் வேண்டா, தீமையான் ஊர் மிகின் - இவன் தீயசெயல் செய்தான் என்று ஊரிலுள்ளார் மிகுத்துக் கூறுவாராயின், கரி இல்லை - செய்யவில்லை என்று சான்று கூறுவார் ஒருவரும் இலர், ஒலித்துடன் நீர் மிகின் சிறை இல்லை - ஓசையுடனே நீர் மிகுமாயின் அதனைத் தடுத்து நிற்கும் அணைஇல்லையாதல்போல. (க-து.) நல்லோர் தோழர் மனையிடத்தும் தனியாகப் புகுதல் கூடாது என்றது இது. (வி-ம்.) 'தோழர் மனையகத்தும்' என்றமையால், ஏனையார் மனையகத்துப் புகுதல் வேண்டாமை பெறப்படும். 'தாமே' என்றமையால், அவர் விரும்பிய ஞான்று தனித்துப் புகுதலில் இழுக்கு ஒன்று மின்மை யறிக. கரி இல்லை என்றது ஊரார் கூறியது மெய்யேயாக, அன்றிப் பொய்யேயாக, எதுவாயினும் சான்றுகொண்டு தீர்த்தல் இயலாது என்பதாயிற்று ஊர் மக்கள் என்றாயது ஆகுபெயர். 'நீர் மிகின் இல்லை சிறை' என்பது பழமொழி. (9) 336. நிறையான் மிகுகல்லா நேரிழை யாரைச் சிறையான் அகப்படுத்தல் ஆகா - அறையோ! வருந்த வலிதினின் யாப்பினும் நாய்வால் திருந்துதல் என்றுமோ இல். (சொ-ள்.) வருந்த வலிதினின் யாப்பினும் - வருந்துமாறு வலிபெறக் கட்டினாலும், நாய்வால் திருந்துதல் என்றுமோ இல் - நாயின் வால் வளைவினின்றும் நீங்கித்திருந்துதல் என்றும் இல்லை; (அதுபோல நிறையான் மிகுகல்லா நேரிழையாரை - மனத்தை
|