ஒப்ப, சகத்தனாய் நின்று ஒழுகும் சால்பே தவம் - ஒன்று பட்டவனாகி நடுவுநிலையினின்று ஒழுகும் அமைதியே தவமாம். (க-து.) காய்த லுவத்த லின்றி ஒழுகும்அமைதியே தவமாம். (வி-ம்.) 'தத்தமக்குக் கொண்ட குறி' என்றது மழித்தல், நீட்டல், மயிற்பீலி கோடல் முதலியனவாம். ஏகாரம் அசை நிலை. 'மனன் ஒத்' தலாவது செஞ்சாந் தெறியினும் செத்தினும் போழினும் நெஞ்சோர்ந் தாடா நிலைமை. தவமே என்றதன்கண் உள்ள ஏகாரத்தைப் பிரித்துச் சால்பு என்றதனோடு கூட்டுக. 'நுகத்துப் பகலாணி' நடுநிலைமைக்கு எடுத்துக் காட்டப்படுவது ஒன்று. 'நுகத்திற் பகலனையாய்' என்பது தஞ்சைவாணன் கோவை.நுகமாவது நுகத்தடி எனப்படுவது. 'நுகத்துப் பகலாணி போன்று' என்பது பழமொழி. (13) 340. உள்ளது ஒருவர் ஒருவர்கை வைத்தக்கால் கொள்ளும் பொழுதே கொடுக்கதாம் - கொள்ளார் நிலைப்பொரு ளென்றதனை நீட்டித்தல் வேண்டா புலைப்பொருள் தங்கா வெளி. (சொ-ள்.) உள்ளது ஒருவர் ஒருவர் கை வைத்தக்கால் - தன்னிடத்துள்ளதொரு பொருளை ஒருவர் ஒருவரிடத்துக் காவல் செய்து தருமாறு கொடுத்தால், கொள்ளும் பொழுது - அவர் வேண்டியபொழுது. தாம் கொள்ளார் கொடுக்க - தாம் அகப்படுத்திக் கொள்ளாமல் கொடுக்கக் கடவர், நிலைப்பொருள் என்று நீட்பித்தல் வேண்டா - நிலைமையான பொருள் என்று கருதிக் கொடாது காலம் நீட்டித்தல் வேண்டா; புலைப்பொருள் தங்கா வெளி - புலால் நாறும் பொருள் எங்ஙனம் மறைப்பினும் மறைபடாது வெளிப்பட்டுவிடும்ஆதலான். (க-து.) அடைக்கலப்பொருளைக் கொள்ளாது வேண்டிய பொழுது கொடுத்துவிடுக. (வி-ம்.) தங்கா என்பது ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம். வெளி : முதனிலை முற்று. புலைப்பொருள் வெளியாதல் போல, அடைக்கலப்பொருளைக் கரப்பின்,மறைபடாது வெளிப்படுதல் உறுதி. புலைப்பொருள் தங்கா வெளி' என்பது பழமொழி. (14)
|