341. நன்றே ஒருவர்த் துணையுடைமை பாப்பிடுக்கண் நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் - விண்டோயும் குன்றகல் நன்னாட! கூறுங்கால் இல்லையே ஒன்றுக் குதவாத ஒன்று. (சொ-ள்.) விண் தோயும் குன்று அகல் நன்னாட - ஆகாயத்திற் பொருந்தும் குன்றுகள் அகன்ற நல்ல நாடனே!, ஒருவர் துணையுடைமை நன்றே - ஒருவர் ஒருவரைத் துணையாகக் கொள்ளுதல் நல்ல தொன்றே; பாப்பு இடுக்கண் - பாம்பான் வரக்கடவதொரு துன்பத்தை, பார்ப்பான்கண் நண்டேயும் தீர்த்தலான் - பார்ப்பானிடத்துத் துணையாக வந்திருந்தது சிறிய நண்டேயாயினும் (அதனை) நீக்குதலால், கூறுங்கால் - சொல்லுமிடத்து, ஒன்றுக்கு உதவாத ஒன்று இல்லை - ஒன்றிற்கும் உதவாத ஒரு சிறு பொருளும்இல்லை. (க-து.) துணைபெற்று வழிச்செல்லுதல்நல்லது. (வி-ம்.) பாப்பு வலித்தல் விகாரம். பாப்பு இடுக்கண் : மூன்றன் தொகை. ஒன்றுக்கும் ஒன்றும் என்னும் முற்றும்மைகள் தொக்கு நின்றன. நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் என்றது ஆசிரியருடைய கருமம் முடிக்கும்பொருட்டு வேற்றூருக்குச் செல்லுமொருவன் தன் தாய்கட்டளைப்படி துணையாக ஒரு நண்டினையும் கொண்டுசென்றான், அயர்ந்து ஒரு மரத்தடியில் அவன் தூங்கும்பொழுது அவனைக் கொல்லும்பொருட்டு வந்த நாகத்தை நணடு கொடுக்கால் இறுகப் பிடித்துக்கொன்றதென்பதாம். 'ஒன்றுக் குதவாத ஒன்று இல்லை' என்பது பழமொழி. (15) 342. விடலரிய துப்புடைய வேட்கையை நீக்கிப் படர்வரிய நன்னெறிக்கண் நின்றார் - இடருடைத்தாப் பெற்ற விடக்கு நுகர்தல் கடனீந்திக் கற்றடியு ளாழ்ந்து விடல். (சொ-ள்.) விடல் அரிய துப்பு உடைய வேட்கையை - விடுதற்கரிய வலிமை உடைய பற்றினை, நீக்கி - முற்ற அறுத்து, படர்வு அரிய நன்னெறிக்கண் நின்றார் - ஒழுகுதற்கரிய நல்ல துறவற நெறியின்கண் நின்றவர்கள், இடர் உடைத்தா(க) - பசி நோய் வந்துற்றதாக - பெற்ற விடக்கு நுகர்தல் - அதன் பொருட்டுத் தானே வந்துற்ற புலாலை உண்ணுதல், கடல்நீந்திகன்று
|