பக்கம் எண் :

241

அடியுள் ஆழ்ந்து விடல் - கடலினை நீந்திக் கன்றினது குளம்படி நீரினுள் அமிழ்ந்துவிடுவதை யொக்கும்.

(க-து.) துறவற நெறியில் நின்றார் எக்காலத்தும் புலால்உண்ணல் ஆகாதாம்.

(வி-ம்.) விடலரிய துப்புடைய வேட்கை எனப் பற்று விடுதலின் அருமையும், 'படர் வரிய நன்னெறி' எனத் துறவற நெறியடைதலின் அருமையும் குறிப்பித்தார். தானே வந்தெய்தினும் நுகர்தல் ஆகாது என்பார், 'பெற்ற விடக்கு' என்றார். விடுதற்கரிய ஆசைக் கடல்களெல்லாம் நீந்திச் சென்றார், பசிநோய் பொறாது புலாலுண்ணுதல், கடல் நீந்தினார் கன்றின்குளம்படி நீரில் நீந்த முடியாது அமிழ்தலை யொக்கும். அவரது நிலையை இழித்துவிடும் என்பதாயிற்று. பட்ட பாடெல்லாம் பயனிலதாய் முடியும். கன்று எதுகை நோக்கிவலித்தது.

'கடனீந்திக் கற்றடியு ளாழ்ந்துவிடல்' என்பது பழமொழி.

(16)

343. செறலிற் கொலைபுரிந்து சேணுவப்பா ராகி
அறிவின் அருள்புரிந்து செல்லார் பிறிதின்
உயிர்செகுத் தூன்றுய்த் தொழுகுதல் ஓம்பார்
தயிர்சிதைத்து மற்றொன் றடல்.

(சொ-ள்.) அறிவின் அருள் புரிந்து செல்லார் - பிற உயிர்களுக்கு அறிவினால் அருள்செய்து மறுமை இன்பத்தையடையாராகி, செறலின் கொலை புரிந்து - அறிவின் மயக்கத்தால் உயிர்களைக் கொலைசெய்து மறுமை இன்பத்தை அடையப்போவதாக மன முவப்புடையராகி, பிறிது இன்னுயிர் செகுத்து - (ஊன் கொண்டு வேட்டால் மறுமை யடைதல் உறுதியென்று) அதன் பொருட்டுப் பிறிதொன்றனது இனிய உயிரை நீக்கி, ஊன் துய்த்து ஒழுகல் - புலாலை மனம் பொருந்தி உண்டு ஒழுகுதல், ஓம்பார் தயிர் சிதைத்து மற்றொன்று அடல் - உடலைப் பாதுகாவாதார் சுவை கருதித் தயிரினை அழித்து மற்றோருணவாக மாற்றிச் சமைத்தலோ டொக்கும்.

(க-து.) வேள்விக்கண்ணும்கொலைபுரிதல் தீதாம்.

(வி-ம்.) 'அறிவின் அருள் புரிந்து' என்றமையானும், செறல் அறிவின் மாறுபாடாகலானும். செறலின் என்பதற்கு அறிவின் மயக்கத்தால் என்று பொருள் கூறப்பட்டது. அச்செயலால் அவர் மறுமை இன்பம் அடைதல் இல்லை யென்பார், 'சேண்' என்றார். அச்செயலால் வேள்விசெய்வார் அவர் தம்மனைவியையும்