மக்களையும் கொன்று வேள்வி செய்வதைக் கண்டிலமென்பார், 'பிறிது' என்று அஃறிணையைக் கூறினார். உடல் ஓம்பாராகிச் சுவை யொன்றனையே ஓம்புவார், தயிரை மற்றொன்றாகச் சமைத்தல்போல, ஊன் துய்த்தலையே கருதுவார் மறுமை என்றும், வேள்வி என்றும் மாற்றி மறைந்தொழுகுவர். உடல் ஓம்பார் என்றது தயிரை மற்றொன்றாகச் செய்யின்,அதனது வலிவு குறைதல்பற்றி. 'தயிர் சிதைத்து மற்றொன்று அடல்' என்பது பழமொழி. (17) 344. நன்கொன் றறிபவர் நாழி கொடுப்பவர்க் கென்றும் உறுதியே சூழ்க எறிதிரை சென்றுலாம் சேர்ப்ப! அதுபோல நீர்போயும் ஒன்றிரண்டாம் வாணிக மில். (சொ-ள்.) எறி திரை சென்று உலா(வு)ம் சேர்ப்ப - வீசுகின்ற அலைகள் மிக்குச்சென்று கரைமேல் உலாவுகின்ற கடல் நாடனே!, நன்கு ஒன்று அறிபவர் - நன்றாக ஒரு பொருளின் கூறுபாட்டை அறிகின்றவர்கள், நாழி கொடுப்பவர்க்கு - நாழி அரிசியேயாயினும் அதனைக் கொடுக்கின்றவர்களுக்கு, என்றும் உறுதியே சூழ்க - எக்காலத்தும் அவர்க் குறுதி தரத்தக்கனவற்றையே நினைக்கக்கடவாராக, நீர் போயும் ஒன்று இரண்டாம் வாணிகம் அதுபோல இல் - கடல் கடந்து சென்று ஒன்று கொண்டு இரண்டாகப் பெருக்கும்வாணிகமும் அதைப்போல ஆவதில்லை. (க-து.) நீ, நன்மை செய்தார்க்கு எக்காலத்தும் நன்மை செய்யும் விருப்புடையவனாக இரு. அதனால் மிகுந்தநன்மை உண்டாம். (வி-ம்.) மற்றொருகால் தாம் வேண்டிய வழி, அவர் கொடுக்க மறுத்த இடத்தும் என்பார், 'என்றும்' என்றார். போயும் என்றதன்கண்ணுள்ள உம்மையைப் பிரித்து வாணிகம் என்பதனோடு கூட்டுக. கடல் கடந்து சென்று செய்யும் வாணிகமும் ஒன்று இரண்டாதலே யன்றி, நன்றியறிவுடையார் வேண்டியபொழுதே வேண்டியன பெறுதல்போலப் பெறக்கூடாமையின், 'அதுபோல இல்' என்றார். நன்மை செய்தார்க்கு நன்மையை நினைத்தொழுகின், அளவற்றநன்மையை அடைய இயலும். 'நீர் போயும் ஒன்றிரண்டாம் வாணிக மில்' என்பது பழமொழி. (18)
|