பக்கம் எண் :

243

345. தமனென் றிருநாழி ஈத்தவ னல்லால்
நமனென்று காயினும் தான்காயான் மன்னே
அவனிவ னென்றுரைத் தெள்ளிமற் றியாரே
நமநெய்யை நக்கு பவர்.

(சொ-ள்.) தமன் என்று இரு நாழி ஈத்தவன் காயினும் அல்லால் - தம்முடைய சுற்றத்தானென்று கருதி இருநாழி அரிசியைக் கொடுத்தவன் வெகுளினும் வெகுள்வதன்றி, நமன் என்று அவன் இவன் என்று உரைத்து எள்ளி - சுற்றத்தான் என்பது கருதி அவன் என்றும் இவன் என்றும் இகழ்ந்து கூறி நகையாடி, தான் காயான் - நன்றியறிதலுடையான் மனவெறுப்புக்கொள்ளான், நம நெய்யை நக்குபவர் யார் - மந்திரங் கூறிக் குண்டத்திலிட வைத்த ஆனெய்யை நக்கிச் சுவை பார்ப்பார் யாவர்? (ஒருவருமிலர்.)

(க-து.) ஒருவன் தனக்கு உதவி செய்தவன் காய்வானாயினும் தான் காய்தலை யொழிக என்றது இது.

(வி-ம்.) 'காயினும்' என்றாராயினும், 'தமனென்று இருநாழி ஈத்தவன்' என்றலின், காய்தல் ஒருதலை யன்றாம். அவன், இவன் என்பன இகழ்ச்சிக் குறிப்பாயின. நம என்பது மந்திரத்தின் ஈற்றில் நிற்பது. வேள்விக்கிடுவான் வைத்த நெய்யை யாரும் சுவை பார்த்தல் இல்லாதவாறுபோல்,உதவி பெற்றார் தமக்குதவி செய்தாரைக் காயக்கடவரல்லராம்.

'யாரே நமநெய்யை நக்குபவர்' என்பது பழமொழி.

(19)

346. நாடி நமரென்று நன்கு புரந்தாரைக்
கேடு பிறரோடு சூழ்தல் கிளர்மணி
நீடுகல் வெற்ப! நினைப்பின்றித் தாமிருந்த
கோடு குறைத்து விடல்.

(சொ-ள்.) கிளர் மணி நீடு கல் வெற்ப - விளங்குகின்ற மணிகள் பொருந்திய நீண்ட கற்பாறைகளையுடைய மலை நாடனே!, நாடி நமர் என்று நன்கு புரந்தாரை - ஆராய்ந்து நம்மவர் என்று கருதி வேண்டியன உதவி நன்றாகக் காப்பாற்றியவர்களை,கேடு பிறரோடு சூழ்தல் - காப்பாற்றப்பட்டவர்கள் அவர்க்குச் செய்யத்தக்க தீமையை அவர் பகைவரோடு சேர்ந்து எண்ணுதல், நினைப்பு இன்றி தாம் இருந்த கோடு குறைத்துவிடல் - ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கோட்டின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலை யொக்கும்.