பக்கம் எண் :

244

(க-து.) செய்த உதவியை மறந்து தீமை செய்பவன் பற்றுக்கோடின்றி அழிவது விதி.

(வி-ம்.) கேடு, கேடு தருஞ் செயல்கள். தான் சூழ்தலேயன்றி அவர் பகைவரோடு சேர்ந்தும் சூழ்தலின், உயிர்விடுதலையொக்கும் என்றார். 'உயிர் விடுதலாவது' தாம் அவர்க்குக் கேடு சூழ்தலால் காப்பாற்றியோரால் துரக்கப்பட்டுக் களைகணின்றி, தன்னைத்தான் புறந்தரு மாற்றலுமின்றி அலக்கணுற்று அழிவது. 'நினைப்பு இன்றி' என்றமையான், கிளையின் மீதுற்றார் தாம் இருக்கும் நிலையறியாது உணர்வின்றி வெட்டி வீழ்தல் போல, செய்த நன்றியறிதலின்றி உணர்வழிந்து கேடுசூழ்ந்து ஒழிவர் என்பதாம்.

'நினைப்பின்றித் தாமிருந்த கோடு குறைத்துவிடல்' என்பது பழமொழி.

(20)

347. பண்டின ரென்றுதமரையும் தம்மையும்
கொண்ட வகையால் குறைதீர நோக்கியக்கால்
விண்டவரோ டொன்றிப் புறனுரைப்பின் அஃதாலவ்
வுண்டவில் தீயிடு மாறு.

(சொ-ள்.) பண்டு இனர் என்று - முன்பு இத்தன்மையுடையார் என்று, தமரையும் தம்மையும் கொண்ட வகையால் - தஞ் சுற்றத்தாரையும் தன்னையும் ஏற்றுக்கொண்ட சிறப்பு வகையாலேயே, குறை தீர நோக்கியக்கால் - குறை தீருமாறு நோக்கியவிடத்து, விண்டவரோடு ஒன்றி புறன் உரைப்பின் - நோக்கப்பட்டார் வேர் பகைவரோடு சேர்ந்து புறங்கூறுதலுறின், உண்ட அ இல் தீ இடுமாறு அஃதால் - இனிய உணவு ஏற்ற அவ்வீட்டிலேயே நெருப்புஇடுமாற்றை ஒப்பது அதுவேயாம்.

(க-து.) செய்ந்நன்றி கோறல் பழிக்குக்காரணமாம்.

(வி-ம்.) செல்வராயிருந்த காலத்து எங்ஙனம் மதிப்புற்று ஒழுகினார்களோ அங்ஙனமே ஒழுகினார்கள் என்பார், 'கொண்ட வகையால்' என்றார். விண்டவர், பிரிந்து நின்றவர் எனப்பொருள்படும்; விள்ளுதல் அடியாகப் பிறந்தது. அஃதால் என்று தேற்றியது. உண்ட இல் தீயிடுமாற்றை யொப்பது பிறிதியாதுமில்லை; அதுவேயென்று ஆராய்ந்து கூறியவாறாம்.

'உண்டஇல் தீயிடு மாறு' என்பது பழமொழி.

(21)