பக்கம் எண் :

245

31. உறவினர்

348. தமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க் குற்ற
தெமக்குற்ற தென்றுணரா விட்டக்கால் என்னாம்
இமைத்தருவி பொன்வரன்றும் ஈர்ங்குன்ற நாட
உமிக்குற்றுக் கைவருந்து மாறு.

(சொ-ள்.) அருவி இமைத்து பொன் வரன்றும் - அருவிகள் விட்டு விளங்கிப் பொன்னைக் கொழித்து இழியும், ஈர்ங் குன்ற நாட - குளிர்ச்சி பொருந்திய மலைநாடனே!, தம் அடைந்தார்க்கு உற்றது தமக்கு உற்றதேயாக - தம்மை ஒரு பொருளாகக்கொண்டு அடைந்தவர்களுக்குற்ற தீமை தம்மை அடைந்ததாகவே நினைத்து, எமக்கு உற்றது என்று உணராவிட்டக்கால் - அதனான் வரும் துன்பமும் எம்மை யடைந்ததேயாம் என்று அறிதலின்றி அதனைக் களையாது விட்டவிடத்து, என் ஆம் - அவர் என்ன ஆவர்?, உமி குற்றுகை வருந்துமாறு - உமியைக் குற்றுதலான் கை வருந்துமாற்றை யொக்கும்.

(க-து.) தம்மை யடைந்தாரைத் தாம்காத்தல் வேண்டும்.

(வி-ம்.) தமக்குற்றது, எமக்குற்றது என்பன தீய செயலும், அதனான் வருந் துன்பமுமாம். உணரா என்பது ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். என்னாம் என்ற வினா யாதும் செய்ய ஆற்றான் எனப் பொருள் பயந்து நின்றது. குற்று என்பது ஏதுப் பொருட்டின்கண் வந்த முதனிலை வினையெச்சம். உமிக்குற்றுதலான் பயன்பெறா தொழிதலேயன்றிக் கையும் வருந்துதல்போல, அவராற் பயன்பெறா தொழிதலேயன்றி, அவரையே களைகணாக நம்பி வேறு முயற்சியின்றி இருத்தலின்,அவர் கைவிட்டவிடத்து அதனைநீக்கமுடியா தழுங்கும்அல்ல லும்உளவாம்.

'உமிக்குற்றுக் கைவருந்துமாறு' என்பது பழமொழி.

(1)

349. சேர்ந்தா ரொருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர்
தீர்ந்தாராக் கொண்டு தெளியினும் - தேர்ந்தவர்க்குச்
செல்லாமை காணாக்கால் செல்லும்வாய் என்னுண்டாம்
எல்லாம்பொய் அட்டூணே வாய்.

(சொ-ள்.) சேர்ந்தார் ஒருவரை - தம்மை அடைந்தாராகிய ஒருவரை, சேர்ந்து ஒழுகப்பட்டவர் - அவரா லடைந்து ஒழுகப்பட்டவர், தீர்ந்தாரா(க) கொண்டு தெளியினும் - தொடர்பு