பக்கம் எண் :

247

(வி-ம்.) ஒருவன் அல்லலுற்ற காலத்து அவன் வருந்தாது அவ்வல்லலை நீக்கும் கிளைஞர்கள் மனையின்கண் உள்ள மருந்துமரத்திற்கு ஒப்பாவார்.

'மனை மர மாய மருந்து' என்பது பழமொழி.

(3)

351. மெய்யா உணரிற் பிறர்பிறர்க்குச் செய்வதென்?
மையார் இருங்கூந்தல் பைந்தொடி! எக்காலும்
செய்யா ரெனினும் தமர்செய்வர் பெய்யுமாம்
பெய்யா தெனினும் மழை.

(சொ-ள்.) மை ஆர் இரும் கூந்தல் பைந்தொடி - கருமை நிறைந்த நீண்ட கூந்தலையும் பசிய தொடியினையும் உடையாய்!, மெய்யா(க) உணரின் - உண்மையாக ஆராயின், பிறர் பிறர்க்குச் செய்வது என் - உறவினரல்லாதோர் பிறருக்குச் செய்யப் போவது என்ன இருக்கின்றது?, எக்காலும் செய்யார் எனினும் - ஒரு காலத்தும் செய்யமாட்டார் என்று கருதும்படி இருந்தாரேயாயினும், தமர் செய்வர் - உறவினரே ஒரு நன்மையைச் செய்வார்கள், பெய்யாதெனினும் பெய்யும் மழை - குறித்த ஒருபருவகாலத்தில் பெய்யாதொழியினும் பின்னையும் பெய்வதுமழையேயாதலான்.

(க-து.) உறவினரே தமக்குற்ற துன்பத்தை நீக்கும் உரிமையுடையவராதலால், அவரோடு சேர்ந்தொழுக என்றது இது.

(வி-ம்.) பிறர் என்றது, உறவினரல்லாதார் மேனின்றது. 'செய்வது என்' என்றது, செய்வதுமுண்டாயினும் ஒருதலையன்மையை உணர்த்திநின்றது. ஒரு காலத்துப் பெய்யாதொழியினும் பின்னையும் பெய்தல் மழை யாமாறுபோல, ஒருகாலத்துச் செய்யாராயினும் பின்னையும் செய்தற்குரியார் உறவினரேயாம். ஆதலின், அவரைநெகிழவிடாதொழிக.

'பெய்யுமாம் பெய்யா தெனினும் மழை' என்பது பழமொழி.

(4)

352. முன்னின்னா ராயினும் மூடும் இடர்வந்தால்
பின்னின்னா ராகிப் பிரியார் ஒருகுடியார்
பொன்னாச் செயினும் புகாஅர் புனலூர
துன்னினா ரல்லார் பிறர்.