(சொ-ள்.) புனல் ஊர - நீர்நாடனே!, ஒரு குடியார் - ஒரு குடியிற் பிறந்தவர்கள், முன் இன்னாராயினும் - முன்னர் இனிமையுடையவ ரல்லராயிருப்பினும், மூடும் இடர் வந்தால் - மிக்க துன்பம் வந்துற்றவிடத்து, பின் இன்னாராகிப் பிரியார் - பின்னரும் இனிமையுடையரல்லராகிப் பிரிந்திரார், துன்னினார் அல்லார் பிறர் - ஒரு குடிப்பிறந்தவ ரல்லவராகிய பிறரை, பொன்னா(க) செயினும் புகார் - பொன்போலப் போற்றிச்செயினும் தமக்கு இடர் வந்த ஞான்று அதனை நீக்கப்புகுதலிலர். (க-து.) ஒரு குடியிற் பிறந்தவர்கள்தம்முள் ஒருவர்க்குத் துன்பம் வந்துற்றபொழுது மாறுபாடுநீங்கி உதவி செய்வர் என்பதாயிற்று. (வி-ம்.) மூடும் இடர் என இடரின்மிகுதி கூறியவாறு. பின் என்றதன்கண் உம்மைதொக்கது. பொன்னாச் செயினும் என்பதற்கு,உதவிசெய்து செல்வமுடையவனாக ஆக்கினும் என்றலும்ஒன்று. பொன்னைப் போலத் தன்னாற் போற்றப்படினும் என்றமையால், தான் இன்னா செய்தலால் முன் இன்னாரா யிருப்பினும் என்று, தன்னாலாயதாகக் கொள்க. துன்னினர் அல்லார், உறவினரல்லாரை உணர்த்தி நின்றது. 'பொன்னாச் செயினும் புகாஅர் புனலூர துன்னினார் அல்லார் பிறர்' என்பது பழமொழி. (5) 353. உளைய உரைத்து விடினும் உறுதி கிளைகள்வாய்க் கேட்பதே நன்றே - விளைவயலுள் பூமிதித்துப் புட்கலாம் பொய்கைப் புனலூர தாய்மிதித்த ஆகா முடம். (சொ-ள்.) விளை வயலுள் - நெல் விளைகின்ற கழனியுள்,பூ மிதித்து - பூக்களை மிதித்து, புள் கலா(வு)ம் பொய்கை புனல் ஊர - பறவைகள் தம்மிற் கூடி மகிழும் குளங்களையுடைய நீர் நாடனே, தாய் மிதித்த முடம்ஆகா - தாயால் மிதிக்கப்பட்ட கால் முடம்படுதல் இல்லை. (ஆதலால்), உளைய உரைத்துவிடினும் - மனம் நோவுமாறு உரைப்பராயினும், உறுதி - உறுதியாயினவற்றை, கிளைகள்வாய் கேட்பதே நன்று -சுற்றத்தாரிடத்துக் கேட்டறிதலே நல்லது. (க-து.) சொற்கொடுமை நோக்காதுஉறுதியாயினவற்றை உறவினரிடத்துக் கேட்டறிக. (வி-ம்.) 'உளைய உரைத்துவிடினும்' எனவே, சுற்றத்தார் எது செய்தாயினும் நல்வழியில் நிறுத்தும் கருத்துடையார்
|