என்பது அறியப்படும். மனம் உளையுமாறு உரைத்தால் தனக்கு நல்லது சொல்வதாக அறிந்துகொள்வான் என்பது கருதித் தீமையையும் மனம் உளையுமா றுரைப்பாரும் உளராகலின், 'கிளைகள் வாய்க் கேட்பதே நன்று' என்றார். மிதித்த என்பது செயப்பாட்டு வினைப்பெயர். தாயால் மிதிக்கப்பட்டன முடமாதலைக் காண்டலில்லை. சுற்றத்தார் நோவ உரைப்பினும், அதனான் வரும் குற்றமொன்றுமில்லை.அவரைக் கேட்டே அறிக. 'தாய் மிதித்த ஆகா முடம்' என்பது பழமொழி. (6) 354. தன்னை மதித்துத் தமரென்று கொண்டக்கால் என்ன படினும் அவர்செய்வ செய்வதே இன்னொலி வெற்ப இடரென்னை துன்னூசி போம்வழி போகு மிழை. (சொ-ள்.) இன் ஒலி வெற்ப - இனிய ஓசையை உடைய மலைநாடனே!, தன்னை மதித்து தமர் என்று கொண்டக்கால் - ஒருவன் தன்னை மதித்துச் சுற்றத்தாராகக் கருதி ஒழுகியவிடத்து, என்ன படினும் - எல்லாத் துன்பமும் வந்து பொருந்தியதாயினும், அவர் செய்வ செய்வதே - சுற்றத்தார் செய்யும் உறுதியாயினவற்றைத் தாமும் செய்வதே, துன் ஊசி போம்வழி போகும் இழை - தைக்கின்ற ஊசி போகின்றவழியே செல்லும் நூலிழையை ஒக்கும்; இடர் என்னை - வரும் குற்றம் யாதுளது? (க-து.) உறவாக மதித்தார்க்கு உறவாய்நின்று உறுதி செய்க. (வி-ம்.) ஊசிவழிச் செல்லும் நூல்போல, உறவாக மதிக்கப்பட்டார், அவர் வழியே செல்க என்பதாயிற்று. அவர் தமர் என்று ஒழுகியதால், தாமுந் தமராய் ஒழுகுதல் கடமையாம், 'என்ன படினும்' என்றமையால், துன்பமும் உள்ளவாதல் பெறப்படுதலின். 'இடர் என்னை' என்றதற்கு வரும் குற்றம் யாதுளது என்று கூறப்பட்டது. அதன்படியே நின்றொழுகுக என்பார், 'இடர் என்னை'என்றார். 'ஊசி போம்வழி போகும் இழை' என்பது பழமொழி. (7) 355. கருவினுட் கொண்டு கலந்தாரும் தம்முள் ஒருவழி நீடும் உறைதலோ துன்பம் பொருகடல் தண்சேர்ப்ப! பூந்தா மரைமேல் திருவொடும் இன்னாது துச்சு.
|