பக்கம் எண் :

25

விளக்கம் உற்றுத் தொன்றுதொட்டு வந்த குடியின்கட் பிறந்தார், ஒழுக்குடையர் ஆகி ஒழுகல் - தத்தமக்குரிய ஒழுக்கத்தினை உடையராகிக் குடிக்கேற்ப ஒழுகுதல், நெய் தலை பால் உக்குவிடல் அஃது அன்றோ - ஆவின் நெய்யிடத்து ஆவின்பாலை ஊற்றிவிடல் போல் அஃது இனிமையைத்தரும் அல்லவா?

(க-து.) தங்குடிக்கேற்ப நல்லொழுக்கினனாய் ஒழுகுதல் இனிமையைப் பயப்பதாகும்.

(வி-ம்.) பழைய குடியாவது 'கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி.' சிறந்த தொடர்ச்சியை உடைமையாவது நாங்கூர்வேள் புகார்ச்சோழற்குப் பெண் கொடுத்தமை போன்ற வீரக்குடிமக்கள் தொடர்ச்சியைப் பெறுதல், விழுத் தொடர்ச்சி விளங்குதல். தொன்றுதொட்டு வருதல், இவை குடிக்கு ஏற்றப்பட்டன.

'நெய்த்தலைப் பால் உக்குவிடல்' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(1)

35. கள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் - தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு.

(சொ-ள்.) தெள்ளிதின் ஆர்க்கும் அருவி மலை நாட - தெளிவாக ஒலிக்கும் அருவியை உடைய மலை நாடனே, பார்ப்பாரும் - பார்ப்பனரும். நாய்கொண்டால் - நாய் கதுவியதாயினும், உடும்பு தின்பர் - உடும்பின் தசையை உயர்வு கருதி உண்பர், (அதுபோல) கள்ளியகிலும் கருங்காக்கைச் சொல்லும் போல் - கள்ளியினிடம் பிறக்கும் அகிலையும் கரிய காக்கையது சொல்லையும் பிறந்த இடம்நோக்கி இகழாது உயர்வாகக் கொள்ளுமாறுபோல, எள்ளற்க யார் வாயின் நல்லுரையை - கீழாயினார் வாயிற் பிறந்ததேயாயினும் நல்லுரையாயின் இகழாது ஒழிக. (போற்றுதல் செய்க.)

(க-து.) சிறந்த பொருள்களை இழிந்தார் கூறினராயினும் இகழாது போற்றுதல் வேண்டும்.

(வி-ம்.) கள்ளியையும், கருங்காக்கையையும், நாயையும் இழிந்த பொருளாகக் கூறி அவற்றின்கண் உள்ளன சிறந்தன என்று கூறினார்; உடும்பின் புலால் மிகச் சிறந்த சுவையுடையது என்பது கருதியே பார்ப்பாரும் உண்பர் என்றார்.