(வி-ம்.) 'இடை விண்டார்' என்றது, ஊழான் வரையறுக்கப்பட்ட நாளளவும் நிலைத்து நில்லாது, இடைக்காலத்திலேயே சூதாட்டால் அழிந்தொழிந்தார் எனச் சூதாட்டினால் வரும் கொடுமை கூறப்பட்டது. 'காதலரோடும்' என்ற உம்மை தொக்கது. காதல் ஈண்டு அன்பு எனப்பட்டு நின்று அதனையுடையார்க்கு ஆயிற்று. 'பணையம்' வைத்து ஆடினர் என்று கூறப்பட்டமையால், விளையாட்டாகவாயினும் ஆடுதல் கூடாது என்று கூறப்பட்டது. 'பாரதத்துள்ளும்' என நூற்சான்று காட்டிவலியுறுத்தப்பட்டது. 'காதலோ டாடார் கவறு' என்பது பழமொழி. (9) 32. அறஞ் செய்தல் 357. சிறத்த நுகர்ந்தொழுகும் செல்வ முடையார் அறஞ்செய் தருளுடைய ராதல் - பிறங்கல் அமையொடு வேய்கலாம் வெற்ப! அதுவே சுமையொடு மேல்வைப்பா மாறு. (சொ-ள்.) பிறங்கல் அமையொடு வேய் கலாம் வெற்ப மலையில் மூங்கிலுடனே வேய்கள் நெருங்கி இணங்கி நிற்கும் வெற்பனே!, சிறந்த நுகர்ந்து ஒழுகும் செல்வம் உடையார் - சிறந்தனவாகிய இன்பங்களை அடைந்து இன்புற்றொழுகும் பொருளுடையவர்கள், அறம் செய்து அருளுடையராதல் - அறங்களைச்செய்து யாவர்மாட்டும் அருள் உடையவராகி ஒழுகுதலாகிய, அதுவே - அச்செயலே, சுமையொடு மேல்வைப்பு ஆமாறு - ஒருவன் பொற்சுமையொடு அதன் மேலே மணிச் சுமையையும் வைத்துச் சுமந்து செல்லுதலை யொக்கும். (க-து.) செல்வ முடையார் அறமும் அருளும்உடையவராகுக. (வி-ம்.) அமை - கெட்டி மூங்கில். வேய் - உள் துளை உடையது. செல்வத்தின் பயனாகிய இம்மை யின்பங்களை அவர் அடைந்தொழுகலான் அறஞ்செய்து அருளுடையராகி மறுமையின்பமும் பெறுகவென்று கூறியவாறு. 'அமையொடு வேய்கலாம் வெற்ப' என்பது, இன்பமாய நாட்டை உடையவன் என்பதைக் குறித்து நின்றது. நுகரும் இன்பத்தோடு, அறத்தானும், அருளானும் வரும் இன்பத்தையும் பெறுவார், பொன்னோடு மணியையும் சுமந்து செல்வாரோ டொப்பர். 'சுமையொடு மேல்வைப்பா மாறு' என்பது பழமொழி. (1)
|