பக்கம் எண் :

252

358. வைத்ததனை வைப்பென் றுணரற்க தாமதனைத்
துய்த்து வழங்கி இருபாலும் - அத்தகத்
தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ
எய்ப்பினில் வைப்பென்பது.

(சொ-ள்.) வைத்ததனை வைப்பு என்று உணரற்க - தான் தேடி வைத்த பொருளைப் பின்னர் வந்து பயன்படுவதாகக் கருதற்க, தாம் அதனை - தாம் அப்பொருளை, துய்த்து வழங்கி - நுகர்ந்தும் பிறருக்குக் கொடுத்தும், இரு பாலும் அத்தக - இருமைக்கும் அழகுண்டாகுமாறு, தக்குழி நோக்கி அறம் செய்யின் - செய்யத்தகுந்த இடம் நோக்கி அறங்களைச்செய்யின், எய்ப்பினில் வைப்பு என்பது அஃது அன்றோ - தளர்ந்த காலத்து உதவும் பொருள்என்பது அதுவன்றோ?

(க-து.) அறமே எய்ப்பினில் வைப்பாம்.

(வி-ம்.) பின்னர்ப் பெறுதல் ஒருதலை யன்மையான் வைப்பென் றுணரற்க என்றார். தான் உண்ணுதலும் அறமாதலின், துய்த்து என்றார். வைப்பு என்பது பின்னர் உதவுமாறு வைக்கப்படும் பொருள்.

'எய்ப்பினில் வைப் பென்பது' என்பது பழமொழி.

(2)

359. மல்லற் பெருஞ்செல்வம் மாண்டவர் பெற்றக்கால்
செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம் - மெல்லியல்
சென்றொசிந் தொல்கு நுசுப்பினாய் பைங்கரும்பு
மென்றிருந்து பாகு செயல்.

(சொ-ள்.) மெல் இயல் - மென்மையான சாயலையும், சென்று ஒசிந்து ஒல்கும் நுசுப்பினாய் - தளர்ந்து துவண்டு வளையும் இடையினையும் உடையாய், மல்லல் பெரும் செல்வம் - வளமையைத் தரும் மிக்க செல்வத்தை, மாண்டவர் பெற்றக்கால் - மாட்சிமையுடையார் பெற்றால், செல்வுழியும் ஏமாப்பச் செய்வது - இனிச் செல்லுகின்ற மறுமையிலும் இன்புறுமாறு அதற்கான அறத்தைச் செய்துகொள்வது, பைங்கரும்பு மென்றிருந்து பாகு செயல் ஆம் - பசிய கரும்பினைச் சுவைத்தறிந்து மேலும் சுவைக்கப் பாகு செய்து கொள்ளுதலை யொக்கும்.

(க-து.) பொருள் பெற்றால் இம்மைக்கும் மறுமைக்கும் - ஆவனவாகிய அறத்தை அதனைக்கொண்டு செய்துகொள்க.