361. மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை ஆய்வின்றிச் செய்யாதார் பின்னை வழிநினைந்து நோய்காண் பொழுதின் அறஞ்செய்வார்க் காணாமை நாய்காணின் கற்காணா வாறு. (சொ-ள்.) மாய்வதன் முன்னே - உணர்வு அழிவதன் முன்னே, வகைப்பட்ட நல்வினையை - பல திறத்த செயல்களான் வரும் அறங்களை, ஆய்வு இன்றி செய்யாதார் - ஆராய்தலின்றிச் செய்யாதவர்கள், பின்னை வழி நினைந்து - பிற்காலத்தில் செய்வோம் என்று நினைத்திருந்து, நோய் காண் பொழுதின் - நோய்கள் சூழ்ந்து நின்று தமக்கு இறுதியை ஆராயும்பொழுது, அறம் செய்வார் காணாமை - தாம் கூறியபடி அறம் செய்வாரைக் காணாதிருத்தல், நாய் காணின் கல் காணாவாறு - நாயைக் கண்ட பொழுது கல் மறைதலை யொக்கும். (க-து.) அறத்தைப் பொருள் பெற்றபொழுதே ஆராய்தலின்றி உடனேசெய்க. (வி-ம்.) உணர்வு அழிந்த பின்றைச் சொல்லலு மாகாமையின், 'மாய்வதன் முன்னே' என்றார். 'ஆய்வு இன்றி' என்றது ஆராய்ந்து காலங் கழியாது உடனே செய்யவேண்டும் என்பதைக் குறித்தது. தோன்றுகின்ற உருவம் நாய் என்று கண்ட அளவில், கல் உணர்வு தோன்றாதவாறு போல,அறம் செய்ய நினைத்த பொழுதின்கண் அதற்கேற்பச்செய்வார் இலராய் ஒழிவர். 'அன்(று) அறிவா மென்னா தறம்செய்க' என்பது திருக்குறள். 'நாய்காணின் கற்காணா வாறு' என்பது பழமொழி. (5) 362. தக்கமில் செய்கைப் பொருள்பெற்றால் அப்பொருள் தொக்க வகையும் முதலும் அதுவானால் மிக்க வகையால் அறஞ்செய் கெனவெகுடல அக்காரம் பால்செருக்கு மாறு. (சொ-ள்.) தக்கம் இல் செய்கை பொருள் பெற்றால் - மாறுபாடில்லாத செயல்களை உடைய செல்வத்தை ஒருவன் பெற்றால், அப்பொருள் தொக்க வகையும் முதலும் அது ஆனால் - அச் செல்வம் திரண்டு வந்த திறனும் அதற்குக்காரணமாயிருப்பதும்
|