பக்கம் எண் :

255

அறமேயென் றறியப்படுமானால், மிக்க வகையால் அறம் செய்க என - பலதிறப்பட்ட நெறியால் அறம் செய் யென்று ஒருவன் சொல்ல, வெகுடல் - அவனைச் சினத்தல், அக்காரம் பால்செருக்கு மாறு - சர்க்கரை கலந்த பாலை உட்கொள்ளாது குமட்டித் துப்புதலை யொக்கும்.

(க-து.) அறத்தாற் பொருள் பெறலா மென் றறிபவன் பலதிறப்பட்ட நெறியால் அறமியற்றக் கடவன்.

(வி-ம்.) தருக்கம் - தக்கம் என்றாயது. மாறுபாடு என்பது பொருள் மாறுபட்ட செயல்கள். உடையாரால் செய்யப்படுகின்றனவே யன்றி, அதன் இயற்கை அன்று என்பார், 'தக்க மில் செய்கைப் பொருள்' என்றார். தொக்க வகையும் முதலும் என்றது பொருள் தொக்கு வருதற்குக் காரணமும் காரியமும் அறமேயா மென்பது. அங்ஙன மறிந்திருந்தும் அறஞ் செய்க வென்பாரை வெகுடல், அக்காரம் கலந்த பாலைக் கொள்ளாது துப்புதலை யொக்கும்.

'அக்காரம் பால்செருக்கு மாறு' என்பது பழமொழி.

(6)

363. உலப்பி லுலகத் துறுதியை நோக்கிக்
குலைத்தடக்கி நல்லறம் கொள்வார்க் கொளுத்தல்
மலைத்தழு துண்ணாக் குழவியைத் தாயர்
அலைத்துப்பால் பெய்து விடல்.

(சொ-ள்.) உலப்பு இல் உலகத்து உறுதியை நோக்கி - அழிவில்லாத உலகத்து அடையும் உறுதியாகிய நன்மையை நோக்கி, நல்லறம் கொள்ளார் குலைத்து அடக்கி கொளுத்தல் - நல்ல அறநெறியைக் கைக்கொள்ளாதாரை அந் நெறியினின்றும் நீக்கி அடக்கி அறநெறியைக் கொள்ளுமாறு அறிவு கொளுத்துதல், மலைத்து அழுது உண்ணா குழவியை - மாறுபட்டு அழுதுகொண்டு பாலுண்ணாத குழந்தைகளை, தாயர் அலைத்து பால் பெய்துவிடல் - தாய்மார்கள் வருத்திப் பால் உண்பித்தலை யொக்கும்.

(க-து.) அறிவுடையோர் அஃதிலராகித் தீநெறியிற் செல்லும் மடவோரை அடக்கி அறிவு கொளுத்துக.

(வி-ம்.) 'குலைத் தடக்கி' என்றது, அவர்கள் நன்மையெய்தும் பொருட்டுவருத்துதலின் குற்றமின் றெனப்பட்டது.

'மலைத்தழு துண்ணாக் குழவியைத் தாயர்
அலைத்துப்பால் பெய்து விடல்' என்பது பழமொழி.

(7)