இன்றி துஞ்ச வரும் - தடையில்லாது இறந்துபடுமாறு வந்து சேரும். (ஆதலால்), தோற்றம் அரிது ஆய மக்கள் பிறப்பினால் - தோன்றுதற்கருமையாகிய இம் மக்கள் பிறப்பைப் பெற்றதனால், ஆற்றும் துணையும் அறம் செய்க -ஒல்லும் வகையான் அறவினையைச் செய்க. (க-து.) ஒவ்வொருவரும் தத்தமக் கியலுமாற்றான்அறம் செய்க. (வி-ம்.) 'தோற்றம் அரிதாய மக்கள்' என்றது மானிடராதலின் அருமையை உணர்த்திற்று. 'கடவுள் படைப்பிற்குப் பெருமை தரவல்ல படைப்பு, நேர்மையுள்ள மனிதன்தான்,' என்பது மேனாட்டாசிரியர் போப்அவர்களின் கூற்று. 'துஞ்ச வருமே துயக்கு' என்பது பழமொழி. (9) 366. பட்ட வகையால் பலரும் வருந்தாமல் கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம் முட்டுடைத் தாகி இடைதவிர்ந்து வீழ்தலின் நட்டறா னாதலே நன்று. (சொ-ள்.) பட்ட வகையால் பலரும் வருந்தாமல் - அறம் செய்வதற்குப் பொருந்திய நெறியால் பலரும் வருந்தாதவாறு, கட்டு உடைத்தாக கருதிய நல்லறம் - தனக்கு உறுதி உடைத்தாகுமாறு கருதிச் செய்தொழுகிய நல்லறத்தை, முட்டு உடைத்தாகி இடை தவிர்ந்து வீழ்தலின் - இடையூறுடைத்தாகி அதனான் இடையிலே நிறுத்தி ஒழிதலைவிட, நட்டு அறான் ஆகலே நன்று - பயிரை நட்டுவைத்து அதனைஅறுத்துப் பயன்பெறா தொழிந்தானெனப்படுதலே நல்லது. (க-து.) அறஞ் செய்வார் இடர்ப்பாடு நோக்கி இடைநிறுத்தலாகாது. (வி-ம்.) 'பட்ட வகையால்' என்றது பல சமயத்தவரும் கூறும் நெறி வேறுபாட்டில் மயங்குதலின்றி, உண்மையை அறிந்து, அவ் வுண்மை நெறியால் என்றவாறு. 'வருந்தாமல்' என்றது அவர் தம்மிடம் வந்து பெறும் அவ் வருத்தமும் கொடாராய்ச் சென்று கொடுக்க என்பதாயிற்று. நட்டுப் பயன்பெறாதொழிவதைவிட அறஞ் செய்து இடைநிறுத்துவான் இகழப்படுவான். 'நட்டறா னாதலே நன்று' என்பது பழமொழி. (10)
|