பக்கம் எண் :

258

367. பலநாளும் ஆற்றா ரெனினும் அறத்தைச்
சிலநாள் சிறந்தவற்றாற் செய்க - கலைதாங்கி
நைவது போலும் நுசுப்பினாய் நல்லறம்
செய்வது செய்யாது கேள்.

(சொ-ள்.) கலை தாங்கி நைவது போலும் நுசுப்பினாய் - மேகலையைத் தாங்கி இறுவது போலும் நுசுப்பினை உடையாய், நல்லறம் செய்வது கேள் செய்யாது - நல்லறம் செய்யும் நன்மையைச் சுற்றத்தார் செய்யார் (ஆதலால்), பல நாளும் ஆற்றார் எனினும் - பல நாட்களும் அறத்தைச் செய்யாராயினும், அறத்தை சிலநாள் சிறந்தவற்றால் செய்க - அறத்தைச் சில நாளாயினும்சிறந்த நெறிகளாற் செய்துய்வாயாக.

(க-து.) அறத்தைச் சில நாளாயினும்செய்துய்க.

(வி-ம்.) சில நாளும் என்ற உம்மை விகாரத்தாற் றொக்கது. கலை முதற் குறை கேளிரால் இம்மைக்குப் புகழும், மறுமைக்கு இன்பமும் எய்துவித்தலாகாமையின்,அறம் செய்வது செய்யாது என்றுறுதிப்படுத்திக் கூறினார்.

'நல்லறம் செய்வது செய்யாது கேள்' என்பது பழமொழி.

(11)

368. நோக்கி யிருந்தார் இமைக்கும் அளவின்கண்
நோக்கப் படினும் உணங்கலைப் புட்கவரும்
போற்றிப் புறந்தந் தகப்பட்ட ஒண்பொருட்கும்
காப்பாரிற் பார்ப்பார் மிகும்.

(சொ-ள்.) உணங்கலை நோக்கி இருந்தார் இமைக்கும் அளவின்கண் - வெயிலில் காயும் பொருள்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இமை கொட்டும் அளவிலே, நோக்கப்படினும் புள் கவரும் - எங்ஙனம் காவல் செய்து கொள்ளப்படினும் அவ்வுணங்கலைப் புட்கள் திருடிச்செல்லும். (அதுபோல), போற்றி புறந்தந்து அகப்பட்ட ஒண் பொருட்கும் - அரண் செய்து பாதுகாத்துத் தமக்காக வைக்கப்பட்டிருக்கும் ஒள்ளிய பொருளுக்கும். காப்பாரின் பார்ப்பார் மிகும் - காவல் செய்வாரைவிட அதனைக் கொள்ளப்பார்க்கின்றவர்கள் மிகப் பலராவர்.

(க-து.) பொருளைக் கொள்ளப் பார்க்கின்றவர்கள் பலராதலின், உடனேஅறஞ் செய்துவிடுதல் நல்லது.

(வி-ம்.) இமைக்கும் அளவாவது ஒரு மாத்திரை நேரம்.