மறுமையும் - மறுபிறப்பின்கண்ணும், தம்மை தாம் ஆர்க்குங் கயிறு - நிரயத்தினின்றும் தாம் வெளியேறாதவாறு தம்மை இறுகக் கட்டி வீழ்த்தும் கயிறாகவும் ஆகும். (க-து.)வஞ்ச மனத்தராய்த் தவமும் அறமும் புரிந்தொழுகுவார் பழியையும், நிரயத்தையும் அடைந்து துன்புறுவர். (வி-ம்.)தவத்தின்கண் வஞ்சமாய் ஒழுகுதலாவது, புலி பசுவின்தோலைப் போர்த்து மேய்ந்தாற்போல, அதற்குரிய வேடம் புனைந்துஅதற்காகாதன செய்தொழுகுதல். அறத்தின்கண் வஞ்சமாய் ஒழுகுதலாவது, பிறர் அறியும் பொருட்டு ஆரவார நீர்மையராய் மனவிருப்பமின்றி அறஞ்செய் தொழுகுதல். இவ்விரண்டினும் பழியும்,நிரயமும் வந்து எய்தும். 'தம்மைத் தாம் ஆர்க்குங் கயிறு'என்பது பழமொழி. (15) 33.ஈகை 372. சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால் பெரிய பொருள்கருது வாரே - விரிபூ விராஅம் புனலூர வேண்டயிரை விட்டு வராஅஅல் வாங்கு பவர். (சொ-ள்.) விரி பூ விரா(வு)ம் புனல் ஊர - விரிந்த பல பூக்களும் கலந்திருக்கின்ற நீர் நாடனே!, சிறிய பொருள் கொடுத்து - இம்மையில் தம்மாலியன்ற சிறிய பொருளை உள்ளன்போடு வறியோர்க் கீந்து, செய்த வினையால் - வந்த நல்வினையால், பெரிய பொருள் கருதுவார் - மறுமையின்கண் மிக்க செல்வத்தைப்பெற நினைப்பவர்கள், வேண்டு அயிரை விட்டு - விரும்பப்படும் அயிரை யென்னும் சிறு மீனைத் தூண்டிலிற் கோத்துவிட்டு, வரால் வாங்குபவர் - பெரியவரால்மீனை இழுப்பவரோடொப்பர். (க-து.) அறிவுடையோர் இம்மையில் இயன்ற அறத்தைச் செய்து மறுமையில் மிக்கபேற்றைப் பெறுவர். (வி-ம்.) வினையென்றமையால், இம்மை, மறுமை என்பன வருவிக்கப்பட்டன.சிறியமீனை விட்டுப் பெரிய மீனை இழுத்தல் போல, இம்மையில் சிறிதுதவி மறுமையிற் பெரும்பேறடைதல் அறிவுடையோர் செயலாம்.பெரிய பொருளாவது துறக்க வின்பம் முதலாயின.
|