'அயிரை விட்டு வராஅஅல் வாங்குபவர்' என்பது பழமொழி. (1) 373. கரப்புடையார் வைத்தகடையும் உதவா துரப்புடைய மன்னர்க்கே துப்புரவ தல்லால் நிரப்பிடும்பை மிக்கார்க் குதவஒன் றீதல் சுரத்திடைப் பெய்த பெயல். (சொ-ள்.) கரப்பு உடையார் - வறியோர்க் கீயாது மறைத்து வைப்பவர்கள், வைத்து - அரிதின் முயன்று, தேடிப் புதைத்து வைத்த பொருள், துரப்பு உடைய மன்னர்க்கே துப்புரவு அது அல்லால் - பகைவரைக் கடிதலுடைய அரசர்க்கே பயன்படுவதல்லாமல், கடையும் உதவா - அவன்வழி வந்தவர்க்கும் உதவுவதில்லை. (அங்ஙனமின்றி), நிரப்பு இடும்பை மிக்கார்க்கு - வறுமையால் துன்பம் மிகுந்தவர்களுக்கு, உதவ ஒன்று ஈதல் - பயன்படுமாறு ஒரு பொருளை ஈதல், சுரத்திடை பெய்த பெயல் - பாலைநிலத்தின்கண் சொரியப்பட்ட மழைநீரை ஒக்கும். (க-து.) புதைத்துவைத்தலின்றிப் பொருளை வறியோர்க்கு ஈவாயாக. (வி-ம்.) கடைவழி, வந்தவர்க்கு ஆகி நின்றது. 'கடையும் உதவா' என்றது கரப்புடையனானமையால். இறக்கும் பொழுது சொல்லலும் ஆகாது; கரப்புடையனாய் இறந்தொழியவே, அவன் வழிவந்தோரால் அறியப்படாது ஒழிவதாயிற்று. 'மன்னர்க்கே துப்புரவு' என்றது உடையோரின்மையால். பூமியில் கிடந்து கண்டெடுக்கப்பட்ட பொருள் அரசர்க்கே உரிமை யுடைமையான் அவர்க்குப் பயன்படுவதாயிற்று. இதனை 'உறுபொருள்' என்பர் ஆசிரியர் திருவள்ளுவர். 'உறுபொருள் வைத்தா ரிறந்துபோகநெடுங்காலம் நிலத்தின்கட் கிடந்து பின் கண்டெடுத்ததூஉம். தாயத்தார் பெறாததூஉமாம் என்பது பரிமேலழகர் விளக்கம். 'துப்புரவாவதல்லால்' என்பது தொக்குநின்றது, 'கடையும்' இறந்தது தழீஇய எச்ச உம்மை. 'சுரத்திடைப் பெய்த பெயல் ' என்பது பழமொழி. (2) 374. பல்லாண்டு மீண்டிப் பழுதாய்க் கிடந்தது வல்லான் தெரிந்து வழங்குங்கால் - வல்லே வளநெடிது கொண்ட தறாஅ தறுமோ குளநெடிது கொண்டது நீர்.
|