(சொ-ள்.) நெடிது கொண்டது குளம் - மிகுந்த நீரைக் கொண்டதாகிய குளம், நீர் அறுமோ - இறைத்தால் நீர் வற்றுதல் உண்டோ? (இல்லை.) (அதுபோல்), பல ஆண்டும் ஈண்டி பழுதாய் கிடந்தது - பல ஆண்டுகளாக ஒன்றுசேர்ந்து குற்றமுடைய தாய்க் கிடந்த பொருளை, வல்லான் தெரிந்து வல்லே வழங்குங்கால் - கொடைவல்லா னொருவன் செய்யும் நெறியறிந்து அதனை வறியோர்க்கு விரைந்து வழங்குமிடத்து, வளம் நெடிது கொண்டது - செல்வத்தை மிகுதியாகக் கொண்ட அது, அறாது - கெடுதல் இல்லை. (க-து.) ஈதலாற் செல்வம் குறைபடுதல் இல்லை. (வி-ம்.) 'பழுதாய்க் கிடந்தது' என்றது.செல்வம் தான் ஈயவும், துய்க்கவும் படுவதாயினும், அவை யில்லானிடத்துப் படுதலின், அவை யொழிந்து பழுதுபட்டு நிற்பதை - குளநீர்போல அவன் செல்வம் குறைதலில்லை; மேன்மேலும் மிகுதியாம். 'திறஞ் சேர்ந்தான் ஆக்கம்போல் திருத்தகும்' என்பதனானு மறிக. அறுமோ குளநெடிது கொண்டது நீர்' என்பது பழமொழி. (3) 375. நினைத்த திதுவென்றந்நீர்மையை நோக்கி மனத்த தறிந்தீவார் மாண்டார் - புனத்த குடிஞை யிரட்டும் குளிர்வரை நாட! கடிஞையில் கல்லிடுவா ரில். (சொ-ள்.) புனத்த குடிஞை இரட்டும் - புனத்தின்கண் கோட்டான்கள் கூப்பாடு செய்கின்ற, குளிர்வரைநாட - குளிர்ந்த மலையை உடைய நாடனே!, கடிஞையில் கல் இடுவார் இல் - இரக்கும் பாத்திரத்தில் அன்னமிடுவதன்றிக் கற்களை இடுவார் இல்லையாதலால், நீர்மையை நோக்கி - வருகின்ற தன்மையைப் பார்த்து, நினைத்தது இது என்று - இவன் கருதி வந்த பொருள் இதுவென்று முகத்தான் அறிந்து, மனத்தது அறிந்து ஈவார் மாண்டார் - மனத்தின் அளவை அறிந்து கொடுக்கின்றவர்களே அறத்தான் மாட்சிமை உடையவராவர். (க-து.)வறியோர் வேண்டும் பொருளைக் குறிப்பறிந்து கொடுப்பாயாக. (வி-ம்.) அவன் விரும்பிய பொருளை அவன்றன் நீர்மையாலும் முகத்தாலும் அறிக என்றது. 'மனத்தது' என்றது,
|