பக்கம் எண் :

265

(சொ-ள்.)அடுத்து ஏறு அல் ஐம்பாலாய் - நெருங்கி வளர்ந்திருக்கின்ற இருள் போன்ற ஐந்து பகுதியாகிய கூந்தலையுடையாய், அடுத்து ஒன்று இரந்தார்க்கு - தம்மை யடைந்து ஒரு பொருளை வேண்டினவர்களுக்கு, ஒன்று ஈந்தாரை - ஒரு பொருளைக் கொடுத்தவர்களை, கொண்டார் படுத்து ஏழையாம் என்று போகினும் போக - இரவலர் தாழ்வுபடுத்தி ஏழை யென்று சொல்லப் போகினும் போக, யாவர்க்கே யாயினும் - எத்தகுதியை உடையவரே யாயினும், கொடுத்து ஏழையாயினார் இல் - பிறர்க்குக் கொடுத்து வறுமையுற்றார் ஒருவருமிலர்.

(க-து.)ஏழைகளுக்குக் கொடுப்பதனால் பொருள் குறைந்து வறுமையுடையராதல் இல்லை.

(வி-ம்.)இரப்போர் ஏழையென்று கூறினும் கூறுக; அஃதன்றிக் கொடுத்தலான் ஏழையாதல் இல்லை. 'போகினும்' என்றது ஐய உம்மை 'யாவர்க்கே யாயினும்' என்றது மிகத் தாழ்ந்த நிலையினராயினும் என்றவாறு. கொடுத்தலால் செல்வர்களாக ஆவரே யன்றி, ஏழையாதல் இல்லை யென்பார், 'இல்'என்று வரையறைப்படுத்திக் கூறினார்.

'கொடுத் தேழையாயினார் இல்' என்பது பழமொழி.

(6)

378. இரப்பவர்க்கீயக் குறைபடுமென் றெண்ணிக்
கரப்பவர் கண்டறியார் கொல்லோ - பரப்பிற்
றுறைத்தோணி நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப
இறைத்தோறும் ஊறுங் கிணறு.

(சொ-ள்.)பரப்பில் - கடலிடத்தில், துறை தோணி நின்று உலா(வு)ம் தூங்கு நீர் சேர்ப்ப - துறையின்கண் தோணிகள் நின்று அசைந்துகொண்டிருக்கும்அசைகின்ற நீரையுடைய கடல் நாடனே!, இரப்பவர்க்கு - தன்னை யடைந்து ஒரு பொருளை வேண்டுவார்க்கு, ஈய குறைபடுமென்று எண்ணி கரப்பவர் - கொடுப்பதால் தமது செல்வம் குறையும் என்று நினைத்து இல்லையென்று சொல்லித் தமது பொருளை மறைப்பவர்கள், இறைதோறும் ஊறும் கிணறு - இறைக்குந்தோறும் நீர் ஊறுங்கிணற்றை, கண்டு அறியார் கொல்லோ - பார்த்தறியாராயினார் போலும்.

(க-து.) கொடுக்கக் கொடுக்கப் பொருள் வளரும்.

(வி-ம்.) கண்டறியார் என்பதனைக் கண்டும் அறியார் என உம்மை தொக்கதாகக் கொண்டு, பார்த்திருந்தும் பொருள்