குறை தீரும் பொருட்டு வேள்வி செய்து, வாழியரோ என்றான் - துறக்கத்தின்கண் நீடு வாழ்வாயாக வென்று கூறினான்.(ஆகையால்), தொடுத்து இன்னர் என்னலோ வேண்டா - ஒரு பொருளை வேண்டுவார் முறையாக இத் தன்மையை உடையார் என்று புகழ்ந்து கூறுதல் வேண்டாவாம், கொடுப்பவர் தாம் தஞ்சீர் அளவு அறிவார் -கொடுக்கின்றவர்கள் தம் நிலையின் அளவையறிந்துசெய்வார்கள். (க-து.) கொடையாளிகள் தொடுத்துக் கூறுதலை எதிர் நோக்காது தம் நிலைமைக்கேற்பக் கொடுப்பர். (வி-ம்.) சொற்குறையாவது, யானும் என் சுற்றமும் துறக்கம் ஓம்புமாறு வேள்வி செய்தல் வேண்டும் என்பது, 'வாழியரோ என்றான்' என்பது பத்துப் பெரு வேள்விகள் வேட்பித்துப் பத்தாவது வேள்வியில் துறக்கம் சுற்றத்தோடு புகுமவனை நீடு வாழ்வாயாக என்று கூறியதை. அடுத்தர - அடுக்க! இது போதர என்றாற் போன்றது. துறக்கம் வருவித் துரைக்கப்பட்டது. 'தொடுத்தின்ன ரென்ன வேண்டா' என்றதுதொடுத்த புலவற்கு ஒருவன் துறக்கம் ஈந்தான்; அங்ஙனம் புகழ்ந்து கூறுதலும்வேண்டா என்றதை. 'கொடுப்பவர் தாமறிவார் தஞ்சீரளவு'என்பது பழமொழி. (9) 381. மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு - நீருலையுள் பொன்தந்து கொண்டு புகாவாக நல்கினாள் ஒன்றுறா முன்றிலோ இல். (சொ-ள்.) மாரி ஒன்று இன்றி வறந்து இருந்த காலத்தும், மழையென்பதே ஒன்று இல்லாமல் வற்றியிருந்த காலத்திலும், பாரி மடமகள் - பாரியினுடைய இளமை பொருந்திய மகள், பாண் மகற்கு - வந்துஇரந்த பாணனுக்கு, நீர் உலையுள் பொன்தந்து - நீரையுடைய உலையுள் பொன்னைப் பெய்து, கொண்டு புகாவாக நல்கினால் - அதனைக் கொண்டுவந்து உணவாகக் கொடுத்தாள்.(ஆதலால்), ஒன்று உறா முன்றிலோ இல் - ஒரு பொருளும்இல்லாத வீடோ இல்லை. (க-து.) ஒவ்வொருவரும் தம்மா லியன்றதொரு பொருளைக் கொடுக்க. (வி-ம்.) புகா என்பது உணவு. 'புலிபுகா வுறுத்த புலவு நாறு கல்லணை' என்றதுங் காண்க. சோறு இன்மையால்
|