நோக்காது - மறுமையில் வரும் பயனை நோக்குதலின்றி, ஆற்றவும் பாத்தறிவு ஒன்று இன்றி - மிகவும் பகுத்தறியும் அறிவு என்பது ஒன்று இல்லாதவராகி, இசை நோக்கி - புகழொன்றனையே நோக்கி, ஈகின்றார் ஈகை - கொடுக்கின்றவர்களது ஈகை, கூலிக்கு செய்து உண்ணுமாறு - கூலிக்குத் தொழில் செய்து உண்ணு நெறியோ டொக்கும். (க-து.) புகழொன்றனையே நோக்கிக் கொள்வோர் நிலையறியாது கொடுக்கும் கொடை சிறந்ததன்றாம். (வி-ம்.) 'பாத்தறிவு ஒன்று இன்றி' என்றது வறியோர் அவரல்லாதோர் என்று பகுத்துணர்தலின்றிப் புகழ் ஒன்றனையே கருதி ஈதலை. அங்ஙனம் ஈதல் புகழ் பயக்குமாயினும், மறுமையின்பத்தைக் கொடா தொழிதலேயன்றி ஈகை யெனவும் படாது என்பதாயிற்று. 'ஈகின்றார் ஈகை' என விதந்ததும் இதன் பொருட்டே. வயமா புலியெனப்படினும், குதிரைகளுக்கு அஃது உவமையாக நூலாட்சியுள் இன்மையான், குதிரை யென்றே கொள்க. புகழ் ஒன்றனையே கருதிப் பகுத்துணர்வு இன்றி ஈதல், கூலிக்கு வேலை செய்வார் செயல் எத்தகையதாயினும் அதைக் கருதாது செய்தலை ஒக்கும். 'கூலிக்குச் செய்துண்ணு மாறு' என்பது பழமொழி. (12) 384. மறாஅ தவனும் பலரொன் றிரந்தால் பெறாஅஅன் பேதுறுதல் எண்ணிப் - பொறாஅன் கரந்துள்ள தூஉம் மறைக்கும் அதனால் இரந்தூட்குப் பன்மையோ தீது. (சொ-ள்.) மறாதவனும் - மறுக்கும் இயல்பில்லாதவனும், பலர் ஒன்று இரந்தால் - இரவலர் பலரும் ஒரு பொருளை விரும்பினால், பெறான் பேதறுதல் எண்ணி - (எல்லோர்க்கும் கொடுக்க முடியாமையால்) அதனைப் பெறாதவன் மயக்கமுறுதலை நினைத்து, பொறான் உள்ளதும் கரந்து மறைக்கும் - மனம் பொறாதவனாகித் தன்னிடத்துள்ள பொருளையும் கரந்து மறைப்பான், அதனால் - ஆகையால், இரந்து ஊட்கு - யாசித்து உண்ணும் உணவிற்கு, பன்மையோ தீது - ஒருவனிடத்திலே பலரும் சென்றிரத்தல் தீமையைத் தருவதாம். (க-து.) ஒருவனிடத்தில் : யாசிப்பதற்குப் பலரும் ஒன்று சேர்ந்து செல்லுதல் ஆகாது.
|