பக்கம் எண் :

27

கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும் - கூரிய நுட்பமான நூற்பொருளைக் கேட்டுணர்ந்த இயற்கையறிவு உடையவர்களுக்கேயானாலும், நீர்த்தன்று - நீர்மையுடையது அன்று (என்று), ஒருவர் நெறி யன்றி கொண்டக்கால் - அவருள் ஒருவர் முறைபிறழ்ந்து கருதிய இடத்து, பேர்த்து தெருட்டல் பெரியார்க்கும் ஆகாது - மீண்டும் அவரைத் தெளிவித்தல் தவத்தால் பெரியவர்களுக்கும் முடியாது. (அவர் கொண்ட கொள்கையின் கண்ணேயே நிற்பர்.)

(க-து.) பிறர் ஐயுறாவண்ணம் ஒழுகுதல்வேண்டும்.

(வி-ம்.) அறிவுடையாரையே தெளிவித்தல் இயலாதெனின் அஃதில்லாரைத் தெளிவித்தல் இயலாது என்பது சொல்லாமே அமையும். பறை நாம் நினைத்த ஓசையை ஒலிப்பதில் வழுவாததுபோல அறிவுடையாரும் கொண்ட கொள்கையினின்றும் சிறிதும் தெளியார். ஆகவே பிறர் ஐயுற்ற பின்னர் அவரைத் தெளிவித்தல்அரிதாகலான் ஐயுறாவண்ணம் ஒழுகுதல் வேண்டும். பெரியோர்க்கும்ஆகாது என்பது தெளிவித்தல் இயலாது என்பதை வலியுறுத்துவது.

'போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின், தேற்றுதல் யார்க்கும் அரிது' என்பது இக்கருத்துப்பற்றி எழுந்த திருக்குறள்.

'ஓர்த்தது இசைக்கும் பறை' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(4)

38. தம்குற்றம் நீக்கலர் ஆகிப் பிறர்குற்றம்
எங்கேனும் தீர்த்தற்கு இடைப்புகுதல் - எங்கும்
வியன் உலகில் வெள்ளாடு தன்வளி தீராது
அயல்வளி தீர்த்து விடல்.

(சொ-ள்.) தம் குற்றம் நீக்கிலர் ஆகி - (அறிவிலார்) தாம் செய்த குற்றத்தைப் போக்காதவர்களாகி, பிறர் குற்றம் தீர்த்தற்கு எங்கேனும் இடைப்புகுதல் - பிறருடைய குற்றங்களைத் தீர்க்கும் பொருட்டு எங்கெங்கும் சென்று புகுதல், வியன் உலகில் எங்கும் - அகன்ற உலகின்கண் எவ்விடத்தும், வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்துவிடல் - வெள்ளாடு தனது வளியான் உண்டாய நோயைத் தீர்க்காது பிற உயிர்களுக்கு வாதத்தான் வரும் நோயைத்தீர்த்து விடுதலோ டொக்கும்.

(க-து.) ஒவ்வொருவரும் தத்தம் குற்றங்களைப் போக்கிய பின்னரே பிறர் குற்றங் களைய முற்படுதல் வேண்டும்.