(வி-ம்.) நல்ல இயல்பு உடையவனாதலின், சிலர் பெறாதொழில் கண்டு பொறாது மறைப்பன். 'கரந்து மறைக்கும்' என்றது, தான் கொடாதவனைப் போல் மறைந்து நின்று தன் பொருளையும் மறைத்தொழுகும் என்பது. பன்மை ஈண்டுப் பலர்மேல் நின்றது. 'இரந்தூட்குப் பன்மையோ தீது' என்பது பழமொழி. (13) 385. தோற்றம் பெரிய நசையினார் அந்நசை ஆற்றா தவரை அடைந்தொழுகல் - ஆற்றுள் கயற்புரை உண்கண் கனங்குழாய் அஃதால் உயவுநெய் யுட்குளிக்கும் ஆறு. (சொ-ள்.) ஆற்றுள் கயல் புரை உண்கண் கனங்குழாய் - ஆற்றின்கண் உள்ள மீனையொத்த மை யுண்ட கண்களையும் பொற் குழையினையுமுடையாய், தோற்றம் பெரிய நசையினார் - தோன்றுதல் மிகுந்த ஆசையினை உடையவர்கள், அந் நசை ஆற்றாதவரை - அவ் வாசையைத் தீர்க்கமாட்டாதவர்களை, அடைந்து ஒழுகல் - தீர்ப்பாரெனக் கருதி அடைந்து அவர்வழி நிற்றலாகிய, அஃது - அதுவே, உயவு நெய்யுள் குளிக்கும் ஆறு - வண்டிக் கிடும் மசையினுள் குளிக்கு மாற்றை யொக்கும். (க-து.) குறைதீர விரும்புவார் அதனைத் தீர்க்கவல்லாரைச் சார்ந்தொழுகுக. (வி-ம்.) 'தோற்றம் பெரிய நசை' என்றது கணந்தோறும் அளவற்றுத் தோன்றும் ஆசையின் மிகுதியை. உயவு நெய்யாவது, கற்றாழஞ் சாற்றில் வைக்கோல் கரியைச்சேர்த்துச் செய்யப்பட்டு வண்டியின் அச்சில் இடுவதொரு மசை. உடல் தூய்மை செய்ய விரும்பினார், உயவு நெய்யுட் குளித்து மேலும் அழுக்கினைச் சேர்த்துக்கொள்ளுதல் போல, நசை பெரிதுடை யார் ஆற்றாரை யடையின் தங்குறையை முடித்தலின்றி அவர் குறையை முடிக்க முந்தி நிற்க வேண்டும். 'உயவு நெய்யுட் குளிக்குமாறு' என்பது பழமொழி. (14) 386. காப்பிகந் தோடிக் கழிபெருஞ் செல்வத்தைக் கோப்பெரியான் கொள்ளக் கொடுத்திரா தென்செய்வர் நீத்த பெரியார்க்கே யாயினும் மிக்கவை மேவிற் பரிகாரம் இல்.
|