(சொ-ள்.) நீத்த பெரியார்க்கே யாயினும் - இருவகைப் பற்றினையும் முற்ற அறுத்த துறவிகளோயினும், மிக்கவை மேவின் பரிகாரம் இல் - தம்மால் தானமாகக் கொடுக்கப்பட்ட மிக்க பொருளைத் தாமே சென்று மேவுவராயின் அதனை இடை நின்று தடுத்தற்குரிய வழி இல்லை. (அதுபோல) காப்பு இகந்து ஓடி - காவல் நெறியைக் கடந்து சென்று, கழி பெரும் செல்வத்தை - குடிகளது மிக்க பெருஞ் செல்வத்தை, கோ பெரியான் கொள்ள கொடுத்திராது என் செய்வர் - அரசனாகிய பெரியவன் வலிந்து சென்று கொள்வானாயின், குடிகள் கொடுக்காதுஎன் செய்து நீக்கவல்லர்? (க-து.) அரசனே குடிமக்களது செல்வத்தைப் பறிக்க முற்படுவானாயின், அதனை நீக்க வல்லவர் யாரும் இலர். (வி-ம்.) பிறர்க்குத் தானமாகக் கொடுத்த துறவிகளே அதனை மீண்டும் அடைய முற்படின், இடை நின்று விலக்க இயலாதவாறு போல, அரசனே மக்களது செல்வத்தைப் பறிக்க முற்படின், இடைநின்று நீக்குதல் இயலாத தொன்றாம். 'மிக்கவை மேவிற் பரிகாரம்இல்' என்பது பழமொழி. (15) 34.வீட்டு நெறி 387. எண்ணக் குறைபடாச் செல்வமும் இற்பிறப்பும் மன்ன ருடைய உடைமையும் - மன்னரால் இன்ன ரெனல்வேண்டா இம்மைக்கும் உம்மைக்கும் தம்மை யுடைமை தலை. (சொ-ள்.) எண்ணக் குறைபடா செல்வமும் - எண்ணுதற்குக் குறைவு இல்லாத செல்வமும், இல் பிறப்பும் - உயர்குடிப் பிறப்பும், மன்னர் உடைய உடைமையும் - மன்னரைத் தம் வயத்தராய் உடைய உரிமையும், மன்னரால் இன்னர் எனல் - அரசர்களால் இத் தன்மையுடையாரெனப் புகழப்படுதலும், வேண்டா - விரும்பத்தக்கனவல்ல, இம்மைக்கும் உம்மைக்கும் - இப்பிறப்பிற்கும் மறு பிறப்பிற்கும் உறுதியாகிய, தம் ஐ - தம்முடைய தலைவனாகிய கடவுளை, உடைமை தலை - உடைமையாகக் கொள்ளுதலே சிறந்தது. (க-து.)ஒவ்வொருவரும் கடவுளை உடைமையாகக் கொள்ளுதலே சிறந்தது.
|