பக்கம் எண் :

276

பள்ளிபால் வாழார் பதிமகிழ்ந்து வாழ்வாரே - அருந்தவர்கள் உறையும் பள்ளியினிடத்து வாழாராகி இல்லின்கணிருந்து இன்புற்று வாழுகின்றவர்களே, முள்ளி தேன் உண்ணுமவர் - சிறந்த தேனை உண்ணாது முள்ளிச்செடியின் தேனை உண்ணுகின்றவர்களோ டொப்பர்.

(க-து.) துறவறம் சேர்தலின்றி இல்லறத்திலேயே இருந்து மகிழ்ந்து இருப்பது முள்ளித்தே னுண்பதை யொக்கும்.

(வி-ம்.) தெளிய அறிதலாவது அவற்றின் நிலையாமையை. ஆசிரியர், சைனராதலின், 'பள்ளி' என்றார். 'முள்ளித்தேன்' என்றமையால், துறவறத்தில் மிகுந்த இன்பம் உண்மை யறியப்படும்.

'வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின், ஈண்டியற் பால பல' என்பது திருக்குறள்.

'முள்ளித்தேன் உண்ணுமவர்' என்பது பழமொழி.

(7)

394. வன்னெஞ்சி னார்பின் வழிநினைந்து செல்குவை
என்னெஞ்சே இன்றிழிவை யாயினாய் - சென்னெஞ்சே
இல்சுட்டி நீயும் இனிதுரைத்துச் சாவாதே
பல்கட்டப் பெண்டீர் மகார்.

(சொ-ள்.) என் நெஞ்சே - எனக்குறுதி சூழும் என் நெஞ்சமே!,வல் நெஞ்சினார் பின் வழிநினைந்து செல்குவை - வலிய நெஞ்சினராய இயமனுடைய வேலையாட்களின் பின்னே செய்த குற்றங்களை நினைத்து அழிந்து செல்வாய் (ஆனால்), இன்று இழிவை ஆயினாய் - இப்பொழுது இழிந்த செயலிற் புகுந்து நின்று செய்கின்றாய், இல்சுட்டி நீயும் இனிது உரைத்து சாவாது - மனைவாழ்க்கையின் பொருட்டு நீயும் இனியவற்றைக் கூறி நின்று இறவாது.செல் நெஞ்சே - துறவறத்திற்குச் செல்வாயாக நெஞ்சமே, அப்பெண்டீர் மகார் பல் கட்டு - அம்மனைவியும் மக்களும் பல தளைகளாவராதலின்.

(க-து.) பெண்டிரும் மக்களும் தளைகளாதலின்,அவற்றை யொழித்துத் துறவறம் சேர்க.

(வி-ம்.)இறக்குஞான்று வருந்திச் செல்வாய்.ஆனால் இன்றுணர்ந்து நடக்கின்றாயில்லை.செல்லும் நெறிக்குறுதியாகத் துறவறம் சேர்ந்துய்க.

'பல்கட்டப் பெண்டீர் மகார்' என்பது பழமொழி.

(8)