பக்கம் எண் :

277

395. சிறந்ததம் மக்களும் செய்பொருளும் நீக்கித்
துறந்தார் தொடர்ப்பா டெவன்கொல் - கறங்கருவி
ஏனல்வாய் வீழும் மலைநாட அஃதன்றோ
யானைபோய் வால்போகா வாறு.

(சொ-ள்.) கறங்கு அருவி ஏனல்வாய் வீழும் மலைநாட - ஒலித்துவரும் அருவிகள் தினைப்புனத்தின்கண் வீழும் மலைநாடனே!, சிறந்த தம் மக்களும் செய்பொருளும் - சிறப்புடைத்தாய தம்முடைய மக்களையும் தாம் ஈட்டிய பொருளையும், நீக்கி துறந்தார் - பற்றுவிட்டுத் துறந்தவர்கள், தொடர்ப்பாடு எவன்கொல் - தமது உடம்பின்மீது பற்றுக்கொண்டு ஒழுகுதல் எது கருதி, யானை போய் வால் போகா ஆறு அஃது அன்றோ - ஒரு வாயிலின்கண் யானை போய் அதன் வால் போகாவாற்றை அஃதொக்குமன்றோ.

(க-து.)துறவறநெறி நின்றார் அகப்பற்றினை முற்ற நீக்குக என்றது இது.

(வி-ம்.) உடம்பின்மீது சிறிது பற்றுக்கொள்ளின், அது காரணமாக ஒழிந்த பற்றுக்களெல்லாம் வந்து சேருமாதலின், அதனை முற்ற அறுத்தல் வேண்டும்.அது யானை போயும் வால் போகாதவாற்றை யொக்கும்.

'யானை போய் வால் போகா வாறு' என்பது பழமொழி.

(9)

396. எனைப்பல் பிறப்பினும் ஈண்டித்தாம் கொண்ட
வினைப்பயன் மெய்யுறுதல் அஞ்சி - எனைத்தும்
கழிப்புழி ஆற்றாமை காண்டும் அதுவே
குழிப்பூழி ஆற்றா குழிக்கு.

(சொ-ள்.) எனைப் பல் பிறப்பினும் - எல்லா வகைப் பிறப்புக்களிலும், ஈண்டி தாம் கொண்ட - ஈட்டித் தாம் மேற்கொண்ட, வினைப்பயன் மெய் உறுதல் அஞ்சி - தீவினையின் விளைவு தம்மேற் சார்தலுக்கு அஞ்சி, எனைத்தும் கழிப்புழிஆற்றாமை காண்டும் - எவ்வளவு சிறிய தீவினையையும் அநுபவிக்கின்ற விடத்துத் துன்பத்தை அடைகின்றோம், அது குழி பூழி குழிக்கு ஆற்றா - அச்செயல் குழியினின்றும் தோண்டப்பட்ட பூழி அக்குழியை நிரப்ப முடியாதவாறு போலும்.

(க-து.) வினை தம்மா லீட்டப்பட்டதே யாதலின், அதன் விளைவை இயைந்து அநுபவிக்கவேண்டும்.