பக்கம் எண் :

279

அரிதாகி விடுமாதலால், ஓத நீர் வேலி உலகத்தார் - ஒளி பொருந்திய கடலை வேலியாகவுடைய இவ்வுலகத்திலுள்ளவர்கள், அந்நெறி காதலர் என்பது அறிந்தலால் - தாம் மேற்கொண்டு ஒழுகுகின்ற அந்நெறியை விரும்புகின்றார்கள் என்பதை அறிந்தன்றி, யாதொன்றும் பயிலார் - யாதொரு நெறியின்கண்ணும் பழகுதலிலர் அறிவுடையார்.

(க-து.) அறிவுடையார் உலகொப்பிய நெறியை மேற்கொண் டொழுகுவார்கள்.

(வி-ம்.) பழகப் பழகத் தீய நெறியும் நன்னெறியாகிவிடும் ஆதலால், உலகத்தார் ஒப்பிய நெறியை அறிந்தே அறிவுடையோர் மேற்கொள்வர்.

'பயின்றது வானக மாகிவிடும்' என்பது பழமொழி.

(12)

399. பரந்தவர் கொள்கைமேல் பல்லாறும் ஓடார்
நிரம்பிய காட்சி நினைந்தறிந்து கொள்க
வரம்பில் பெருமை தருமே பரம்பூரி
என்றும் பதக்கே வரும்.

(சொ-ள்.) பரந்தவர் கொள்கைமேல் பல்லாறும் ஓடார் - பல்வேறு வகைப்பட விரிந்த சமயத்தார் கொள்கைகள்மீது பல நெறிக்கண்ணும் செல்லாதவர்களாகி, நிரம்பிய காட்சி நினைந்து அறிந்துகொள்க - நன்மை நிரம்பிய கொள்கையை ஆராய்ந்தறிந்து மேற்கொள்க - பரம்பூரி என்றும் பதக்கே வரும் - பரம்படித்த கூலி எக்காலத்தும் பதக்கு நெல்லே உறுதியாக வரும்; (அதுபோல), வரம்பு இல்பெருமை தரும் - கடைப்பிடித் தொழுகிய அக்கொள்கையே எல்லையில்லாத பெருமையை உறுதியாகத் தரும்.

(க-து.) ஒரு நெறியை உறுதியாகக் கொண்டொழுகுக.

(வி-ம்.) காட்சி, அறிவு.அஃது ஈண்டு அறனான் ஆராயப்பட்டு முடிந்த கொள்கைக்கு ஆயிற்று.

'பரம்பூரி என்றும் பதக்கே வரும்' என்பது மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பின் திருத்தத்தின்படி கொள்ளப்பட்டது.பதக்கு என்பது இரண்டு மரக்கால்.

'பரம்பூரி என்றும் பதக்கே வரும்' என்பது பழமொழி.

(13)

பழமொழிநானூறு

மூலமும்உரையும் முற்றும்