பக்கம் எண் :

3

நூல்

1.கல்வி

1. ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்.

(சொ-ள்.) ஆற்றச் சுரம் போக்கி - மிகவும் வழியைக் கடக்கவிட்டு, உல்குகொண்டார் இல்லை - தீர்வைப் பொருள் அடைபவர்கள் இல்லை, மரம்போக்கிக் கூலிகொண்டார் இல்லை - ஓடத்தைச் செலுத்தி நிறுத்தியபின் கூலியைப் பெறுபவர்கள் இல்லை. (அவைபோல), ஆற்றும் இளமைக்கண் - கல்வியைக் கற்றற்குரிய இளமையில், கற்கலான் - கல்லாதவன், மூப்பின்கண் போற்றும் - முதுமையின்கண் கற்று வல்லவனாவான், எனவும் புணருமோ என்று சொல்லுதலும் கூடுமோ?இல்லை.

(க-து.) கற்றற்குரிய இளமைப் பருவங் கழிவதற்கு முன்னேகல்வி கற்கவேண்டும்.

(வி-ம்.) மரம், தன்னாற் சமைந்த ஓடத்தின்மேல் நிற்றலால் ஆகுபெயர். ஆற்றுதல் - செய்தல். கற்றலும் ஒரு செயலாதலால் 'ஆற்றும்' எனவும், அதற்குரிய காலம் இளமையே என 'ஆற்றும் இளமைக்கண்' எனவும் கூறப்பட்டது. கற்கலான் :எதிர்மறை வினைப்பெயர்.

(1) 'சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லை.' (2) 'மரம் போக்கிக் கூலிகொண்டார் இல்லை' - இவை இப் பாட்டில் வந்த பழமொழிகள். 'தும்பைவிட்டு வாலைப் பிடியாதே' என்பது இவற்றையொத்த பழமொழியாய் இக்காலத்து வழங்கி வருகின்றது.

(1)

2. சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றுஒன்(று) அறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு.

(சொ-ள்.) சொல்தொறும் சோர்வுபடுதலால் - (கற்றார் முன்பு) ஒன்றைச் சொல்லுந்தோறும் குற்றம் உண்டாதலால்,