பக்கம் எண் :

30

விளங்கும் அலைகளை வீசுகின்ற குளிர்ந்த கடல் நாடனே!, உரிஞ்சி நடப்பாரை உள்ளடி நோவ நெருஞ்சியும் செய்வதொன்று இல்லை - அஞ்சாது உராய்ந்து நடப்பவர்களை அவர் உள்ளங் கால்கள் வருந்தும்படி நெருஞ்சிமுள்ளும் ஊறு செய்வதில்லை, பெரும் பழியும் பேணாதார்க்கு இல் - மிக்கபழியும் தன்னை அஞ்சிப் பாதுகாவாதவர்களுக்குமனவருத்தம் செய்தல் இல்லை.

(க-து.) நல்லோர் பழிக்கு அஞ்சுவர்,தீயோர் அஞ்சார்.

(வி-ம்.) பேணாதவர்க்கு மனவருத்தம் இல்லை என்று குறிப்பால்தீயோரை இகழ்ந்தவாறு.

'நன்றறி வாரிற் கயவர் திருவுடையர், நெஞ்சத்து அவலம் இலர்.' இஃது இக் கருத்துப்பற்றி எழுந்த திருக்குறள்.

'பெரும்பழியும் பேணாதார்க்கு இல்' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(8)

42. ஆவிற் கரும்பனி தாங்கிய மாலையும்
கோவிற்குக் கோவல னென்றுலகம் கூறுமால்
தேவர்க்கு மக்கட் கெனல்வேண்டா தீங்குரைக்கும்
நாவிற்கு நல்குர(வு) இல்.

(சொ-ள்.) ஆவிற்கு அரும்பனி தாங்கிய மாலையும் - பசுக்கூட்டங்கட்கு வந்த அரிய துன்பத்தை நீக்கிய திருமாலையும், கோவிற்கு கோவலன் என்று உலகம் கூறும் - ஆநிரைகளுக்குத் தக்க இடையன் என்று உலகம் சொல்லா நிற்கும். (ஆகையால்) தேவர்க்கு மக்கட்கு எனல் வேண்டா - தேவர்க்கு உரைப்பது இது மக்கட்கு உரைப்பது இது வெனல் வேண்டப்படுவதன்று, தீங்கு உரைக்கும் நாவிற்கு - தீமையை எடுத்துக்கூறும் நாவினுக்கு, நல்குரவு இல் - வறுமை இல்லையாகலான்

(க-து.) பழித்துரைக்கப் புகுவார்க்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர்என்பதில்லை.

(வி-ம்.) கோவலன் இகழ்ச்சிக் குறிப்பில் வந்தது. இந்திரன் சினந்து ஏவிய மழையைக் கண்ணன் மலைகொண்டு தடுத்து ஆக்களைக் காப்பாற்றிய செய்தி, 'ஆவிற் கரும்பனி தாங்கிய மாலை' என்று குறிக்கப்படுகின்றது. ஆக்களைக் காவல்செய்தல் சிறந்த அறமென்பார், 'ஆவிற் கரும்பனி தாங்கிய மாலையும்' என்றார். 'ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்' என்பர் பிறரும். மாலையும் உம்மை உயர்வு சிறப்பு. 'தீங்குரைக்கும் நாவிற்கு நல்குரவு இல்' என்பது பழமொழி.

(9)