பக்கம் எண் :

31

6. இன்னா செய்யாமை

43. பூவுட்கும் கண்ணாய் பொறுப்பர் எனக்கருதி
யாவர்க்கே யாயினும் இன்னா செயல்வேண்டா
தேவர்க்கும் கைகூடாத் திண்ணன்பி னார்க்கேயும்
நோவச்செய் நோயின்மை இல்.

(சொ-ள்.) பூ உட்கும் கண்ணாய் - தாமரையும் (ஒப்பாதற்கில்லையே யென்று) வருந்தும் கண்ணை உடையாய்!, தேவர்க்கும் கைகூடாத் திண் அன்பினார்க்கேயும் - தேவர்களுக்கும் இயலாதகாழ்த்த அன்புடையார்க்காயினும், நோவச்செய் - துன்புறுத்தினால், நோயின்மை இல் - துன்புறாதிருப்பது இல்லை (பொறுமையிலராவார்.) (ஆகையால்) பொறுப்பார் எனக்கருதி - எத்துணைத் தீங்கு செயினும் பொறுமையுடன் இருப்பார்கள் என்று தாமே நினைத்து, யாவர்க்கேயாயினும் - எத்துணை எளியராயினும், இன்னா செயல் வேண்டா -தீங்கினைச் செய்தல் வேண்டாவாம்.

(க-து.) எவர்க்குந் தீங்கியற்றல்வேண்டா.

(வி-ம்.) 'தேவர்க்கும் கைகூடாத் திண்ணன்பு' என்பது அன்பின் உயர்வைக் காட்டுவது. அன்புடையாரிடமும் ஏனையோரிடமும் தீச்செயல்களைச் செய்தல் வேண்டா.

(1)

44. வினைப்பயன் ஒன்றின்றிவேற்றுமை கொண்டு
நினைத்துப் பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும்
புனப்பொன் அவிர்சுணங்கிற் பூங்கொம்ப ரன்னாய்
தனக்கின்னா இன்னா பிறர்க்கு.

(சொ-ள்.) புனம் பொன் அவிர் சுணங்கின் பூம்கொம்பர் அன்னாய் - புனத்திற்படும் பொன்போல விளங்கும் தேமலையுடைய பூங் கொம்பை யொப்பாய்!, தனக்கு இன்னா பிறர்க்கு இன்னா - தனக்குத் துன்பந்தருவன பிறருக்குந் துன்பந் தருவனவாம் (ஆதலால்), வினைபயன் ஒன்று இன்றி - செய்கின்ற செயலிற் பயனொரு சிறிதுமில்லாமல், வேற்றுமை கொண்டு - பகைமை ஒன்றே கொண்டு, நினைத்து - ஆராய்ந்து, பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும் - பிறர்வருந்தத் தக்கனவற்றைச் செய்தலை ஒழிதல் வேண்டும்.

(க-து.) பிறரையும் தம்மைப்போல நினைத்துத் தீங்கு செய்யாதிருத்தல் வேண்டும்.