பக்கம் எண் :

33

நீ அறிவு இல்லாதாய், நெடியது காண்கிலாய்! - (பிறர்க்குத் தீங்கு செய்தலால் வரும் பயனை) நெடுங்காலத்திற்குப் பின் அறியாய், அடியுளே - அந்த நிலையிலே, பிறன்கேடு முன் பகல் கண்டான் - பிறன் ஒருவனுக்குத் தீங்கினைப் பகலின் முதற்பகுதிக்கண் செய்தான், தன் கேடு பின்பகல் மன்ற கண்டுவிடும் - தனக்கு வரும்தீங்கினைப் பகலின் பிற்பகுதிக்கண் தப்பாமல்அடைவான்.

(க-து.) முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்.

(வி-ம்.) நெஞ்சே, தீங்கின் பயனை அடைதற்கு நீண்ட நாட்கள் செல்லும் என்று நினைத்தலை ஒழி. உடனேயே பயனை அடைவாய். ஆதலால், யார்மாட்டும் தீங்குசெய்ய நினைத்தலை விட்டுவிடு. 'பிறர்க்(கு) இன்னா முற்பகல் செய்யின் தமக்(கு) இன்னா, பிற்பகல் தாமே வரும்.' இஃது இக்கருத்துப்பற்றியெழுந்த திருக்குறள்.

'முன்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு பின்பகல் கண்டு விடும்' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(4)

47. தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார்
மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால்
ஆற்றா(து) அவர் அழுத கண்ணீர் அவைஅவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்து விடும்.

(சொ-ள்.) தோற்றத்தால் பொல்லார் - குடிப்பிறப்பால் தீய செயல்களை யுடையவர், துணையில்லார் - ஒரு துணையும் இல்லாதவர், நல்கூர்ந்தார் - வறுமையுடையார், மாற்றத்தால் செற்றார் - சொற்களால் பகைவரை ஒத்தார், என - என்றிங்ஙனம் நினைத்து, வலியார் ஆட்டியக்கால் - குடிப் பிறப்பு, துணை, செல்வம் முதலிய வலிமை உடையார் அவையிலாரை நலிந்த இடத்து, ஆற்றாது அவர் அழுத கண்ணீர் அவை - தாங்க இயலாது அவர்கள் தங்கண்களினின்றும் பரப்பிய கண்ணீராகிய அவையே, அவர்க்கு கூற்றமாய் வீழ்ந்துவிடும் - தம்மை நலிந்த அவர்க்குக் கூற்றாய் விழாநிற்கும்.

(க-து.) எளியார் அழுத கண்ணீர் அவர்தம்மை நலிந்தார்க்குக் கூற்றாய் முடியும்.

(வி-ம்.) தோற்றம், துணை, செல்வம் முதலியன இன்மை எளிமையைக் குறிப்பன. நலியப்பட்டார் கண்களினின்றுஒழுகும் ஒவ்வொரு துளியும் நலிந்தார் வாழ்வை அறுக்கும் வானின் கூரிய பல் என்று அறிக.