பக்கம் எண் :

36

(வி-ம்.) குறுநரியின்பொருட்டு அம்பினைக் கொள்ளாதது போலக் கீழாயோர் பொருட்டுத் தீங்குசெய்ய மனங்கொள்ள வேண்டுவதில்லையாம். அஃது அவர் பிழையன்று. அவர் பிறந்த தாழ்ந்த குடியின் இயல்பு என்றொழியவேண்டும். நாராயம் - நாராயணனது அம்பு; குறி தவறாது சென்று உயிரை வாங்குவதற்கு நாராயணனது அம்பினைக் கூறுதல் மரபு.

நாராயணன் அம்பினை உவமை கூறவே, மேலாயோர் தீங்கு செய்யின் அவர்செய்த தீமைபொறுத்தற்கரியது என்பது பெறப்பட்டது.

'குறு நரிக்கு நல்ல நாராயம் கொளல்' - இஃது இச் செய்யுளில் வந்த பழமொழி.

(8)

7.வெகுளாமை

51. இறப்பச் சிறியவர் இன்னா செயினும்
பிறப்பினால் மாண்டார் வெகுளார் - திறத்துள்ளி
நல்ல விறகின் அடினும் நனிவெந்நீர்
இல்லம் சுடுகலா வாறு.

(சொ-ள்.) இறப்ப சிறியவர் - குடிப்பிறப்பினால் மிகவும் இழிந்தவர்கள், இன்னா செயினும் - துன்பந்தருஞ் செயல்களைச் செய்தாராயினும், பிறப்பினால் மாண்டார் வெகுளார் - குடிப்பிறப்பினால் மாட்சிமைப் பட்டவர்கள் சினத்தலிலர், (அது) திறத்து உள்ளி நல்ல விறகின் அடினும் - கூறுபாடாக ஆராய்ந்து நல்விறகினைக்கொண்டு காய்ச்சினும், நனி வெந்நீர் - மிகவும் வெப்பமாகிய நீர், இல்லம் சுடுகலா வாறு -வீட்டினை எரிக்க முடியாதவாறுபோலும்.

(க-து.) கீழ்மக்கள் செய்யும் துன்பத்தால் மேன்மக்கள் சினங் கொள்ளுதல் இல்லை.

(வி-ம்.) வெந்நீர் வீட்டை வேகச் செய்யாதவாறு போலப் பெரியோர்கள் கீழ்மக்களைக் கோபியார். 'பிறப்பினால் மாண்டார் வெகுளார்' எனவே. வெகுளாமை உயர் குடிப்பிறப்பின் இயல்பு என்பதாம். 'சிறியவர் இன்னா செயினும்' எனவே தீங்கு செய்தல் தாழ்ந்தகுடிப்பிறப்பின் இயல்பு என்பதும் பெறப்பட்டது.

'நனி வெந்நீர் இல்லம் சுடுகலாவாறு' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி.

(1)