பக்கம் எண் :

37

52. ஆறாச் சினத்தன் அறிவிலன் மற்றவனை
மாறி ஒழுகல் தலையென்ப - ஏறி
வளியால் திரையுலாம் வாங்குநீர்ச் சேர்ப்ப!
தெளியானைத் தேறல் அரிது.

(சொ-ள்.) வளியால் ஏறி திரையுலாம் வாங்குநீர் சேர்ப்ப - காற்றால் கரைமீது ஏறித் திரைகள் வீசுகின்ற வளைந்த கடல் நாடனே!, தெளியானைத் தேறல் அரிது - மனத்தின்கண் தெளிதல் இல்லாதவனை நம்புதல் முடியாது. (அதுபோல) ஆறாச்சினத்தன் அறிவிலன் - மாறாத வெகுளியை உடையான் (ஆனால்) அறிவு இல்லாதவன், அவனை மாறி ஒழுகல் தலை யென்ப - (அவனோடு சேர்ந்திருத்தல் முடியாது ஆதலால்) அவனை நீங்கி ஒழுகுதல் சிறந்ததென்று சொல்லுவர்நல்லோர்.

(க-து.) மிக்க சினம் உடையாரோடுசேர்ந்திருத்தல் இயலாது.

(வி-ம்.) பேச்சு ஒழித்தல், காண்டலை ஒழித்தல் முதலியன பிறவும் உண்மையின் விட்டு நீங்குதலே சிறந்ததென்பார், 'தலையென்ப' என்றார். சினம் சேர்ந்தாரைக் கொல்லியாதலால் அஃதுடையாரைவிட்டு நீங்காவிடின் துன்பத்திற் குள்ளாக்கப்படுவார்கள். மனத்தெளிவில்லானை நம்புதல் கூடாததுபோல சினமுடையானோடு சேர்ந்தொழுகல் கூடாது என்பதாம். மற்று : அசைநிலை : 'தெளியானைத் தேறல் அரிது' - இஃது இச் செய்யுளில் வந்த பழமொழி.

(2)

53. உற்றதற்(கு) எல்லாம் உரம்செய்ய வேண்டுமோ?
கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும்
நெற்செய்யப் புல்தேய்ந்தாற் போல நெடும்பகை
தற்செய்யத் தானே கெடும்.

(சொ-ள்.) நெல் செய்யப் புல் தேய்ந்தாற் போல - நெற்பயிரைச் செய்தலினால் வயலிலுள்ள புல் தானே அழிந்தாற் போல், நெடும்பகை - தீராப்பகை, தன் செய்ய தானே கெடும் - ஒருவன் தன்னை வலிமையுறச் செய்தலால் அப்பகை தானே அழிந்து விடும், (அதுபோல்) கற்று அறிந்தார் - கற்றறிந்தவர்கள், உற்றதற்கு எல்லாம் உரம்செய்ய வேண்டுமோ - நேரிட்ட இடையூற்றிற்கெல்லாம் தனித்தனியே தம்மை வலிசெய்யவேண்டுமோ? (வேண்டுவது இல்லை), தம்மை வெகுளாமைக் காப்பமையும் - தம்மைச் சினத்தினின்றும் காத்தலே அமையும்.